சென்னை: தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் தொடர்பாக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க இருப்பதாகத் தகவல் வெளியான நிலையில் துரைமுருகன் அவரது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ''நான் இரண்டு நாட்கள் திருநெல்வேலிக்குச் சென்று காலையில் தான் சென்னைக்கு வந்தேன். தற்போது ஆளுநரைச் சந்திக்க எந்த திட்டமும் இல்லை. தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வருவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குத்தான் அதிகாரம் உள்ளது. அவர் நினைத்தால் அமைச்சரவையை மாற்றலாம் அல்லது நீக்கலாம்.
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் குறித்து உங்களுக்கு(பத்திரிகையாளர்கள்) தெரிந்த தகவல் தான் எனக்கும் தெரியும். அமைச்சரவையில் மாற்றம் இருக்கட்டும். நான் துணை முதலமைச்சரா? இருக்கட்டும். நான் நிதியமைச்சரா? இருக்கட்டும். நான் துணை முதலமைச்சராக வந்தால் நல்லது தான்.
அமைச்சரவையில் மாற்றம் செய்தால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம். முதலமைச்சர் வெளிநாட்டு பயணத்தில் நான் செல்லவில்லை. என்னுடைய துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பயிற்சிக்காக வெளிநாடு சென்றுள்ளனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துதான் காலாவதியாகிவிட்டது. அமைச்சரவை மாற்றம் குறித்து அமைச்சர்களிடம் பதற்றம் எதுவும் இல்லை. ஆளுநரை சந்தித்தால் உங்களிடம் வெளிப்படையாகச் சொல்வேன். இன்னும் நான் முதலமைச்சரை சந்திக்கவில்லை. கால் வலி என்று வீட்டிற்குச் சென்றுவிட்டார், நானும் வீட்டிற்கு வந்துவிட்டேன்'' எனக் கூறினார்.
ஓ.பன்னீர் செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் இணைப்பிற்கு திமுக காரணம் என்று அதிமுகவின் அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் கூறிய கருத்திற்குப் பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், ''ஜெயக்குமார் நல்ல ஆளு, அவர் எப்பவுமே இது மாதிரி ஸ்டன்ட் அடிப்பார்'' எனக் கூறினார்.
இதையும் படிங்க: நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களுக்கு முறைப்படி பதவி உயர்வு - அமைச்சர் எ.வ. வேலு கறார்!