சட்டப்பேரவையில் கேள்வி நேரத்திற்கு பின்னர் திமுக உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன், சமீபத்தில் வெளியிடப்பட்ட மருத்துவ தரவரிசை பட்டியலில் இரட்டை இருப்பிட சான்றிதழ் பெற்ற வெளிமாநில மாணவர்கள் பெயர் இடம்பெற்றுள்ளது எனக்கூறி, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார்.
இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், "இதுவரை அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு பெறப்பட்ட 39,013 விண்ணப்பங்களில் தீவிர கண்காணிப்புகளுக்கு பிறகு 3,516 விண்ணங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டிற்காக போராடி பெற்ற மருத்துவ இடங்கள் வெளிமாநில மாணவர்களுக்கு வழங்கப்படாது என்பதில் அரசு உறுதியாக இருக்கிறோம். இதற்காக தனியாக குழு அமைத்து விண்ணப்பிக்கும் மாணவர்களின் பிறப்பு சான்றிதழ், மாணவரின் பெற்றோர்களின் பிறப்பு சான்றிதழ், மாணவரின் பெற்றோர் தமிழ்நாட்டில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ், மாணவர் மற்றும் பெற்றோர்களின் சாதி சான்றிதழ், நியாயவிலை அட்டை உள்ளிட்ட விவரங்கள் பெறப்பட்டு சரிபார்க்கப்படுகிறது.
அத்துடன் சேர்ந்து மாணவர் மற்றும் பெற்றோரிடத்தில் பிரமாண பத்திரம் ஒன்றில் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. அந்த பிரமாண பத்திரத்தில், மாணவரின் விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் மற்றும் சமர்பிக்கப்பட்டடுள்ள சான்றிதழ்கள் அனைத்தும் உண்மையானவை, அதில் ஏதாவது தவறு இருந்தால் மாணவரை தகுதி நீக்கம் செய்யலாம், கிரிமினல் வழக்கு தொடுக்கலாம் அதற்கு சம்மதிக்கிறேன் என உறுதி கூறும் வாசகம் இடம் பெற்றுள்ளது" என்றார்.