நாடு முழுவதும் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை, இந்த வைரஸால் எட்டாயிரத்து 718 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் சென்னை மாவட்டம் கரோனா வைரஸ் தொற்றின் மையப்புள்ளியாகத் திகழ்கிறது.
பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வரும் காவல் துறையினர், இந்த வைரஸிற்கு அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், ராஜ்பவன் வளாகத்தில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றும், தீயணைப்பு மீட்புத்துறை ஊழியருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து ராஜ்பவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'இன்று (13.5.2020) ராஜ்பவன் வளாகத்தில் தீயணைப்பு நிலையத்தில், பணிபுரியும் தீயணைப்பு மீட்புத் துறை ஊழியருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகத் தகவல் வெளியானது.
ஆனால், பாதிக்கப்பட்ட நபர் தற்போது ராஜ் பவன் வளாகத்தில் வேலை செய்யவில்லை. ஏப்ரல் 14ஆம் தேதி அன்றே தி.நகர் தீயணைப்பு மீட்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டு பணியாற்றி வருகிறார்' என விளக்கம் அளித்துள்ளது.
இதையும் பார்க்க: கரோனா பரவாமல் தடுப்பது மக்கள் கையில்தான் உள்ளது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி