சென்னையில் நிவர் புயல் கரையை கடப்பதற்கு முன்தினம் சென்னையில் கனமழை பெய்துவந்தது. அப்போது பணியில் இருந்த தலைமைச் செயலக காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி ரோந்துப் பணி மேற்கொண்டபோது, ஓட்டேரி சாமிநாதபுரத்தில் கடும் மழை பெய்த நிலையிலும் ஒரு குடிசை வீட்டினுள் இளைஞர் ஒருவர் இருந்தார்.
குடிசை வீடு கனமழைக்கு இடிந்துவிழும் நிலையில் காணப்பட்டதால் உடனடியாக அவரை வீட்டிலிருந்து வெளியேற்ற பெண் காவல் ஆய்வாளர் முயற்சித்தார். மதுபோதையில் இருந்த அந்த நபர் தனது குடிசை வீட்டினுள் உள்ள பூனைக்குட்டியைக் காப்பாற்றினால்தான் வெளியே வருவேன் என கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த இளைஞரை மீட்ட காவல் ஆய்வாளர் அவரது பூனைக்குட்டியையும் ஒரு வாளியில் போட்டு மீட்டார். வீட்டை விட்டு வெளியேறிய சில நிமிடங்களிலேயே குடிசை வீடு இடிந்து விழுந்தது. இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் அந்த இளைஞரின் பெயர் கணேஷ் என்பதும் அவர் பெயிண்டராக வேலை செய்துவருவதும் தெரியவந்தது. அவரது தாய் உடல்நலக்குறைவால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கனமழையின்போது குடிசை வீட்டிலிருந்த இளைஞரையும் அவரது பூனைக்குட்டியையும் காப்பாற்றிய காவல் ஆய்வாளரை சென்னை மாநகர காவல் ஆணையர் நேரில் அழைத்துப் பாராட்டினார்.
மேலும் காவல் துறை சார்பில் அந்த இளைஞருக்கு இடிந்த வீட்டைக் கட்டிக் கொடுப்பதாக காவல் துறை ஆணையர் உறுதியளித்துள்ளதாக ஆய்வாளர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து மருத்துவர் நிபுணர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை