தமிழ்நாடு மீன்வளத் துறை, ’நிவர்’ புயல் தொடர்பாகப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதன் விளைவாக புயல் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களிலிருந்து செயல்படும் அனைத்து விசைப்படகுகள், நாட்டுப் படகுகள் கரை திரும்பி பாதுகாப்பாக கரைகளில் நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும், நவம்பர் 25ஆம் தேதி சில தொலைக்காட்சி சேனல்களில் வெளியான செய்தி குறிப்பிற்கான பதிலறிக்கையை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் நவம்பர் 25ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 200 மீனவர்கள் காணவில்லை என்ற செய்தி ஒளிபரப்பப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 499 விசைப்படகுகள், ஆயிரத்து 965 நாட்டுப் படகுகள் பாதுகாப்பாக கரையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டத்திலிருந்து மீனவர்கள் எவரும் காணாமல்போகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடற்கரை கிராமங்களில் முகாமிட்டு புயல் நிலவரங்களைக் கண்காணிக்கும் மீன் துறை அலுவலர்கள் இத்தகவலை உறுதிசெய்துள்ளனர்.
தற்போது மீனவர்களுக்கான பிரத்யேக வானிலை எச்சரிக்கை எதுவும் இல்லாத மேற்கு கடற்கரை, அரபிக்கடல் பகுதிகளில் மட்டுமே மீனவர்கள் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:'ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எப்போதும் அனுமதியில்லை' - அமைச்சர் ஜெயக்குமார்