நேற்றைய தினம் தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (நவம்பர் 24) புயலாக வலுப்பெற்றுள்ளது. நிவர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் அடுத்த 12 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் இப்புயல், நாளை (நவம்பர் 25) பிற்பகலில் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே கரையை கடக்கக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, சென்னைக்கு தென் கிழக்கே சுமார் 450 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள இப்புயலானது, மணிக்கு சுமார் 5 கி.மீ. வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இதனால், நாளை கடலோர மாவட்டங்களில் காற்று மணிக்கு 75லிருந்து 85 கி.மீ. வரையும், இடையிடையே 95 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். நாளை புயல் கரையைக் கடக்கும்போது காற்று மணிக்கு 100லிருந்து 110 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 120 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில், கன மழை முதல் அதி கன மழை வரை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கனமழையும், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிகக்கனமழையும், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாளை மறுநாள் (நவம்பர் 26) வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய வட மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நிவர் புயல் முன்னெச்சரிக்கை: ‘தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல வேண்டாம்’- முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவு!