நித்யானந்தா ஆசிரமத்தில் நடக்கும் குற்றச் சம்பவங்களை வெளியில் சொல்லக்கூடாது என்பதற்காக, தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக, நித்யானந்தா மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆசிரம நிர்வாகி விஜயகுமார் புகாரளித்தார்.
தன்பாலின ஈர்ப்புக்கு அழைத்தார்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "2009ஆம் ஆண்டு வரை நித்யானந்தா ஆசிரமத்தை நிர்வகித்து வந்தேன். அவர் என்னை பல முறை தன்பாலின ஈர்ப்புக்கு அழைத்துள்ளார். ஆசிரமத்தில் பணிபுரியும்போது பல இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து, ஆசிரமத்தில் சீடர்களாக சேர்த்துள்ளேன்.
நித்யானந்தா பல ஆண் மாடல்களின் அரை நிர்வாண புகைப்படத்தை எனக்கு அனுப்பி, பயிற்சி அளிக்க வேண்டும் என தொந்தரவு கொடுத்தார். என்னை தாக்கி ஆசிரமத்தில் உள்ள பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சொல்ல வைத்து, வீடியோ எடுத்து வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டல் விடுத்தார்.
கொலை மிரட்டல்
நித்யானந்தாவை விட்டு விலகி வந்ததால் எனக்கும், என் குடும்பத்தினருக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல் வந்த வண்ணம் இருக்கிறது. நித்யானந்தா செய்த குற்றத்திற்கான அனைத்து ஆதாரங்களையும் ஆணையரிடம் கொடுத்துள்ளேன். எனக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறேன்" என்றார்.
இதையும் படிங்க... நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட மருத்துவர் மீண்டும் மாயம்!