சென்னை: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று (செப்.13) தொழில்துறை நிறுவன பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடினார்.
சிஐஐ எனப்படும் இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், வேளாண்மை, உற்பத்தி, உள்கட்டமைப்பு, ஆட்டோமொபைல், கல்வி, சுற்றுலா, ஏற்றுமதி, மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், ஆடை உற்பத்தி, பொழுதுபோக்கு, சிறு, குறு தொழில் நிறுவனங்கள், நிதி சேவைகள் உள்ளிட்ட 15 துறைசார்ந்த 38 நிறுவன பிரதிநிதிகளுடன் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிறுவனங்களின் தலைமைச் செயல் அலுவலர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை அமைச்சரிடம் முன்வைத்தனர்.
தமிழ்நாட்டில் உள்ள தொழில்துறை நிறுவனங்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள், அதற்கு தீர்வு காண ஒன்றிய அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், கொள்கைரீதியாக தொழில்துறை எதிர்பார்க்கும் மாற்றங்கள், சலுகைகள் உள்ளிட்டவைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருப்பூர் மாவட்டங்களிலிருந்தும், பாண்டிச்சேரியிலிருந்தும் தொழில்துறை நிறுவனப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அப்பல்லோ மருத்துவமனை (Apollo Hospital) குழும மேலாண் இயக்குநர் சுனிதா ரெட்டி, ஜிஆர்டி (GRT) நிறுவனத்தின் குழுமத் தலைவர் அனந்த பத்மநாபன், சோஹோ கார்பரேஷன் (zoho corporation) நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, அசோக் லேலண்ட் (Ashok Leyland)) குழும மேலாண் இயக்குநரும், சியாம் (SIAM) ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்க துணைத் தலைவருமான விபின் சோந்தி, கவின்கேர் (cavinkare) மேலாண் இயக்குநர் சி.கே.ரங்கநாதன், டபே இந்தியா (TAFE India) நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் மல்லிகா சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: 'ஒன்றிய அரசு எந்தவித பாரபட்சமும் காட்டவில்லை...’ - நிர்மலா சீதாராமன்