சென்னை: கரோனாவை கட்டுப்படுத்துவதற்காக சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தனி கவனம் செலுத்தி வருகின்றனர்.
அதனடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சியில் இதுவரை 38,72,322 நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கரோனா தொற்று குறைந்ததால் வரும் 1ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
மேலும் பள்ளிக்கு வரும் அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் முதல் தவணை தடுப்பூசியாவது செலுத்திக்கொண்டு வர வேண்டுமென தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.
தடுப்பூசி செலுத்தியவர்கள் விவரம்
இந்நிலையில், சென்னை மாநகராட்சி கீழ் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் இதுவரை 90.1 விழுக்காடு நபர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.
மொத்தம் 3,328 மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்கள் உள்ளனர். அதில் 2,999 ஆசிரியர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். மேலும் 2,104 ஆசிரியர்கள் இரண்டு தவணைத் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர்.
2,002 ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் மாநகராட்சிப் பள்ளிகளில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் 1,688 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 759 நபர்கள் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: வேளாண் துறை சார்ந்த 25 புதிய அறிவிப்புகள் பேரவையில் வெளியீடு