சென்னை: கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்தவர், சையத் இப்ராஹிம் செரியாலீசத் (40). இவர் மீது 2015ஆம் ஆண்டு மலப்புரம் காவல் ஆணையரகத்தில் அடங்கியுள்ள குருவரகுண்டு காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் செய்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், போலீசார் சையத் இப்ராஹிம் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, அவரை தேடி வந்துள்ளனர்.
ஆனால் சையத் இப்ராஹிம், போலீசிடம் சிக்காமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்துள்ளார். அதோடு அவர் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்று விட்டதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, கேரள மாநிலம் மலப்புரம் காவல் ஆணையர் சையத் இப்ராஹிம் செரியாலீசத்தை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் எல்.ஓ.சி (LOC-Look Out Cirucular) போடப்பட்டிருந்தது. ஆனால், அவர் போலீசில் சிக்காமல் தொடர்ந்து 9 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்துள்ளார்.
இந்த நிலையில், இன்று (டிச.31) அதிகாலை குவைத்தில் இருந்து சென்னைக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் வந்தது. அதில் சென்னை வந்த பயணிகளை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை பரிசோதனை செய்தனர். அப்போது, அதே விமானத்தில் கடந்த 9 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த சையத் இப்ராஹிமும் வந்தார்.
குடியுரிமை அதிகாரிகள் அவருடைய பாஸ்போர்ட் ஆவணங்களை கம்ப்யூட்டரில் பரிசோதித்தபோது, சையத் இப்ராஹிம் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, போலீசாரால் கடந்த 9 ஆண்டுகளாக தேடப்பட்டு வரும் குற்றவாளி என்று எல்.ஓ.சியால் உறுதிபடுத்தப்பட்டது. இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள் சையத் இப்ராஹிமை சுற்றி வளைத்துப் பிடித்து, குடியுரிமை அலுவலகத்தில் உள்ள தனி அறையில் அடைத்து வைத்தனர்.
மேலும் அவருக்கு, சென்னை விமான நிலைய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. அதோடு, கேரள மாநிலம் மலப்புரம் காவல் ஆணையரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை வந்த கேரள தனிப்படை போலீசார், சையத் இப்ராஹீமை விமான நிலையத்திலே கைது செய்து அவரை கேரளா அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: பிரான்ஸ் விமானத்தில் கடைசி நேரத்தில் கண்டறியப்பட்ட இயந்திர கோளாறு..! நல்வாய்ப்பாக உயிர் தப்பிய 290 பேர்..!