சென்னை: சேத்துப்பட்டு, பிருந்தாவன் தெருவைச் சேர்ந்தவர் கவிதா (31). இவர் சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில், காவலராகப் பணியாற்றி வருகிறார்.
காவலர் கவிதாவுக்கு நேற்று முன்தினம் (ஆக.18) உடல் நலம் சரியில்லாததால் திருவல்லிக்கேணியில் உள்ள அரசு மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனைக்குச் சென்று விட்டு, இரவு பணிக்குச் சிவானந்தா சாலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவர் பின்னால் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், கவிதா அணிந்திருந்த ஒன்பது சவரன் தாலி செயினை பறித்துச் சென்றனர். பிறகு இது குறித்து கவிதா அளித்த புகாரின் பேரில், திருவல்லிக்கேணி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல், அதே நாளில், சென்னை, பள்ளிக்கரணை பவானியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சரஸ்வதியிடம் (53) அடையாளம் தெரியாத நபர்கள் நான்கு சவரன் செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.
சிந்தாந்திரிபேட்டை ரயில் நிலையத்திலிருந்து காலை இவர், இருசக்கர வாகனம் மூலம் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தபோது, அவரைப் பின்தொடர்ந்து வந்த நபர்கள் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து, சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில் திருவல்லிக்கேணி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் பெண்களிடம் தொடர்ச்சியாக தங்க செயின் கொள்ளையடிக்கப்பட்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.