சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதில் முதலாம் கட்ட மெட்ரோ ரயிலில், சென்னை சென்ட்ரல் முதல் பரங்கி மலை வரையும், மேலும் விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை இயக்கப்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து சென்னையில் தற்போது, 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தூரத்திற்கு 3 வழித்தடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மாதவரம் முதல் சிறுசேரி வரையிலும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலும், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரையிலும் தற்போது 45க்கும் மேற்பட்ட இடங்களில் உயர்மட்ட பாதை, சுரங்கப் பாதை மற்றும் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதில் 40 கி.மீ. மேல் சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் பாதைகள் அமைத்து, 48 ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
மெட்ரோ ரயில் திட்டத்துக்கான சுரங்கம் தோண்டும் பணியை முதலமைச்சர் ஸ்டாலின் மாதவரத்தில் கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து சுரங்கம் அமைக்கும் பணி பல்வேறு பகுதியில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்டத்தில் 'நீலகிரி' எனப் பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் பணியை முடித்து மாதவரம் நெடுஞ்சாலையை வந்தடைந்தது என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்தது “வழித்தடம் 3இல் மாதவரம் பால் பண்ணை முதல் கெல்லிஸ் வரையிலான முதல் 9 கி.மீ. நீளத்திற்கு சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு இதற்காக 7 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.
மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரை 45 கி.மீ., தூரத்திற்கு அமைகிறது. இந்த வழித்தடத்தில் மொத்தம் 47 ரயில் நிலையங்கள் வருகின்றன. அதில் 19 உயர்மட்ட ரயில் நிலையங்களிலும், மீதமுள்ள 28 ரயில் நிலையங்கள் சுரங்கப்பாதை ரயில் நிலையங்களாக அமைக்கப்பட்டு வருகிறது.
இதற்கான சுரங்கம் தோண்டும் பணி கடந்த அக்டோபரில் தொடங்கியது. இந்த நீலகிரி என்று பெயரிடப்பட்ட இயந்திரம் சுரங்கம் தோண்டும் பணியைத் தொடங்கி 1.4 கி.மீ., நீளமுள்ள சுரங்கப்பாதை பணியை முடித்துள்ளது” என மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சென்னை குரோம்பேட்டையில் தங்க நகை நிறுவனத்தில் மோசடி - மூன்று பேர் கைது