சென்னை சைதாப்பேட்டை கே.பி. கார்டன் பகுதியில் வசித்துவருபவர் மணி. இவர் கடந்த செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி தனது உறவினரைச் சந்திக்கச் சென்றுள்ளார். அப்போது, இவரது வீட்டின் பூட்டை உடைத்து மடிக்கணினி, செல்போன் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
புகார்
இது குறித்து மணி சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து தேடிவந்துள்ளனர்.
விசாரணை
இதேபோல், கடந்த மாதம் அதே பகுதியைச் சேர்ந்த ஹிமாயூன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து ஆறு கிராம் மோதிரம் திருடப்பட்டதாகப் புகார் வந்தது. இரு திருட்டும் ஒரே மாதிரி நிகழ்ந்திருப்பதால் சந்தேகமடைந்த காவல் துறையினர், திருட்டு நடந்த இரு வீட்டிலும் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது ஒரே நபர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
குற்றவாளி கைது
எனவே இதே பாணியில் திருடும் நபரின் புகைப்படங்களை வைத்து ஆய்வுசெய்தபோது ஆவடி பகுதியைச் சேர்ந்த வினோத் குமார் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து, காவல் துறையினர் வினோத்குமாரை கைதுசெய்ய வீட்டிற்குச் சென்றபோது அவர் வீட்டை காலிச் செய்துவிட்டு திருநின்றவூர் பகுதியில் வசித்துவருவது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் திருநின்றவூர் பகுதியில் மறைந்திருந்த வினோத்குமாரை காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை நடத்தினர்.
பறிமுதல்
அந்த விசாரணையில், இரவு நேரத்தில் பூட்டிய வீடுகளை மட்டுமே நோட்டமிட்டு திருடுவதை வாடிக்கையாக வைத்திருப்பதும், கடந்த 4 மாதங்களாகத் தொடர் திருட்டில் ஈடுபட்டு நகை, செல்போன், மடிக்கணினி ஆகியவற்றை திருடிவந்ததும், காவல் துறையிடம் சிக்காமல் இருக்க வீட்டை காலிசெய்து திருநின்றவூர் பகுதிக்குச் சென்றதும் தெரியவந்தது.
பின்னர் அவரிடமிருந்து 20 சவரன் தங்க நகைகள், 2 மடிக்கணினிகள், செல்போன்கள் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல்செய்து அவரைச் சிறையிலடைத்தனர். மேலும் ஏற்கனவே 2017ஆம் ஆண்டு திருட்டு வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தங்கை வீட்டில் கைவரிசையை காட்டிய அண்ணன்!