அரபு நாடான துபாயில் ஐஎஸ்ஐஎஸ், சிமி, அல்கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய அன்சாருல்லா உள்ளிட்ட 14 பேரை, தேசிய புலனாய்வு முகமை (NIA) அலுவலர்கள் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்தனர். அதைத்தொடர்ந்து, கடந்த 15ஆம் தேதி பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின், புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பின்னர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி தமிழ்நாட்டின் சென்னை, மதுரை, நெல்லை, ராமநாதபுரம், தேனி, பெரம்பலூர், மயிலாடுதுறையில் என்ஐஏ அலுவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையைச் சேர்ந்த தவுபிக் அகமது துபாயில் வங்கி ஒப்பந்த ஊழியராக பணியாற்றியவர். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்ட இவரை, என்ஐஏ அலுவலர்கள் கைது செய்தனர். இதையடுத்து, சென்னை கொத்தவால் சாவடி பகுதியிலுள்ள அவரது வீட்டில் என்ஐஏ அலுவலர்கள் சோதனை நடத்திவருகின்றனர்.
கைது செய்யப்பட்ட 14 பேர்களில் முகமது ஷேக் மைதீன் என்பவரின் வீடு மதுரை நரிமேடு பகுதியில் உள்ளது. கொச்சியிலிருந்து வந்த என்ஐஏ அலுவலர்கள் மாநகரின் பல்வேறு பகுதிகளில் இரண்டாவது நாளாக சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் ஷேக்மைதீன் வீட்டில் குறிப்பிடத்தக்க ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை என காவல் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
கைது செய்யப்பட்ட 14 பேரில் ரபி அகமது முஸ்தாகீர், பைசல் செரீப் உள்ளிட்ட 5 பேர் ராமநாதபுர மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். எனவே, அவர்களது வீடுகளிலும், என்ஐஏ அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இன்று காலை கீழக்கரை, வாலிநோக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமையைச் சேர்ந்த அலுவலர்கள் ஐந்து பேரின் வீடுகளிலும் சோதனை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகின்றன.
அதன்பின், திருநெல்வேலி மேலப்பாளையத்தைச் சேர்ந்த மற்றொரு பயங்கரவாதி முகமது இப்ராஹிம் வீட்டில், கேரள மாநிலம் கொச்சியில் உள்ள என்ஐஏ அலுவலர்கள் 10 பேர், சோதனை மேற்கொண்டுள்ளனர். இதில், பல ஆவணங்கள் சிக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சோதனையையொட்டி அந்தப் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தேனி மாவட்டம் கோம்பையைச் சேர்ந்த சகோதரர்கள் மீரான்கனி (40) முகமது அப்சல் (30) ஆகியோரின் உறவினர்களிடம், 20-க்கும் மேற்பட்ட என்ஐஏ அலுவலர்கள் சோதனை நடத்திவருகின்றனர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், சோதனையின் முடிவிலேயே அனைத்து விவரங்களும் தெரியவரும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.