சென்னை: இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதம் 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா' அமைப்பை மத்திய அரசு தடை செய்தது. இந்த விவகாரம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பும், அமலாக்கத்துறையினரும் வழக்குப்பதிவு செய்து இந்தியா முழுவதும் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் தொடர்பான இடங்களில் சோதனை நடத்தி வழக்குகள் பதிவு செய்தனர்.
தீவிரவாத அமைப்புகளோடு தொடர்பு இருப்பதாக கூறப்படும் நபர்கள் மீது தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கைது நடவடிக்கை மேற்கொண்டு குற்றப் பத்திரிகைகளையும் தாக்கல் செய்து வருகின்றனர். அதன் அடிப்படையில் கடந்த வாரம் முதல் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடர்பான இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அமைப்பு அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக இன்று(மே 9) தமிழகத்தில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு தொடர்புடைய இடங்களில் அதிகாரிகள் அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக சென்னை, மதுரை, திண்டுக்கல், திருச்சி,தேனி ஆகிய பகுதிகளில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.
குறிப்பாக சென்னை திருவொற்றியூரில் தாங்கல் புதிய காலனி பகுதியில் அப்துல் ரசாக் என்பவர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆறு பேர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தடை செய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வட சென்னை மாவட்ட செயலாளராக இருந்த அப்துல் ரசாக் என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.
திருவொற்றியூர், தாங்கல், புதிய காலனி, பகுதியில் ரேகா என்பவருக்கு சொந்தமான வீட்டில் கடந்த எட்டு மாதத்திற்கு முன்பு லீசுக்கு குடியிருந்து வரும் அப்துல் ரசாக் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்று வருகிறது. தேசிய புலனாய்வு முகமை ஆய்வாளர் ரஞ்சித் சிங் தலைமையில் 6 பேர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அப்துல் ரசாக் புது வண்ணாரப்பேட்டை செரியன் நகர் பகுதியை சேர்ந்தவர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் வடசென்னை மாவட்ட செயலாளராக இருந்தவர். புரசைவாக்கம் மூக்காத்தாள் தெருவில் இருந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ்நாடு தலைமை அலுவலகத்தை நிர்வகித்து வந்துள்ளார்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மக்கள் தொடர்பு ஒருங்கிணைப்பாளராகவும், தலைமை நிலைய செயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.கடந்த 8 மாதத்திற்கு முன்பு தாங்கல் பகுதியில் வாடகை வீட்டிற்கு குடியேறி வந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அப்துல் ரசாக் பழைய வண்ணாரப்பேட்டையில் மென்ஸ் வியர் எனும் ஆண்கள் ஆடையகத்தில் அண்மையில் சேர்ந்துள்ளார். தாங்கல் மார்க்கெட் பகுதியில் ஏராளமான போலீஸ் வாகனங்கள் அணிவகுத்து 30க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.