ஆந்திரா, தெலங்கானா மக்களுக்கான ராயலசீமா நீர் பாசன திட்டத்தை நிறுத்தி வைக்க தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் கோவிநெல்லா ஸ்ரீரீனிவாஸ் என்பவர் தாக்கல் செய்த மனுவில்,
ஸ்ரீசைலம் அணையில் இருந்து தண்ணீர் எடுத்து ஆந்திரா, தெலங்கானா மக்களின் குடிநீர், நீர்பாசனத்திற்காக ஆந்திர அரசு 'ராயலசீமா நீர்பாசன' திட்டத்தை கொண்டு வர உள்ளது. மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெறாமல் தொடங்கும் இத்திட்டத்தால் எதிர்காலத்தில் இரு மாநில மக்களுமே தண்ணீர் இல்லாமல் வறட்சியால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதால் திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அந்த வழக்கு நீதிபதி ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணர் உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த திட்டத்தால் ஏற்படும் நன்மை என்ன? இந்த திட்டத்தால் எவ்வளவு மக்கள் பயன் பெறுவார்கள்? மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெறப்பட்டதா? என்பது குறித்து ஆய்வு செய்ய மத்திய சுற்றுச்சூழல் துறை, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், ஆந்திரா, தெலங்கானா மண்டல அலுவலர்கள், கிருஷ்ணா ஆறு மேலாண்மை வாரியம் இணைந்து குழு அமைக்க உத்தரவிட்டது.
இந்த குழு இரண்டு மாதத்தில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், அதுவரை இந்த திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.