தொடர் மோசடியில் ஈடுபட்ட முன்னாள் பாஜக பிரமுகர் கைது: அடையாறு பரமேஸ்வரி நகரை சேர்ந்தவர் பவானி (52). இவருக்கு விருகம்பாக்கம் கம்பர் தெருவில் 1200 சதுர அடி கொண்ட தனி வீடு உள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞரான சிவ அரவிந்தன் என்பவர் பவானியை அணுகியுள்ளார். அப்போது அடையாறில் தான் சொந்தமாக நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதாகவும், தங்களது வீட்டை வாடகைக்கு கொடுத்தால் இங்கு நிறுவனத்தை நடத்திக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய பவானி அட்வான்ஸ் ஒரு லட்சம் ரூபாய் எனவும்; மாதம்தோறும் வாடகை 20,000 ரூபாய் என ஒப்பந்தம் செய்து வீட்டை வாடகைக்கு சிவ அரவிந்தனுக்கு கொடுத்துள்ளார். பின்னர் ஆறு மாதம் சரியாக வாடகை தந்த சிவ அரவிந்தன், அதன் பிறகு சரியாக வாடகை பணம் தராததால் பவானி நேரில் சென்று வீட்டை பார்த்தபோது அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அந்த வீட்டை சிவா அரவிந்தன் தனது வீடு எனக் கூறி இரண்டு பேருக்கு தலா ரூ.8 லட்சம் என லீசுக்கு கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பவானி இதுகுறித்து சிவ அரவிந்தனிடம் கேட்டபோது தகாத வார்த்தையால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறி, பவானி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வழக்கறிஞரான சிவ அரவிந்தன், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாஜக கட்சியில் முன்னாள் வழக்கறிஞர் பிரிவு செயலாளராக இருந்துள்ளார்.
இதே போல சிவா அரவிந்தன், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ராஜேந்திரனிடம் ஏழு லட்ச ரூபாயும், அடையாறில் லீனா பெர்னான்டஸ் என்பவரிடம் 2 கோடி ரூபாயும், வீட்டை வாடகைக்கு எடுத்து மோசடி செய்த வழக்கிலும் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதேபோல தொடர்ச்சியாக சிவ அரவிந்தன் முதியவர்களை குறி வைத்து மோசடியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இது மட்டுமின்றி சிவா அரவிந்தன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாஜக கட்சியில் மாநில அளவில் பதவி வாங்கித் தருவதாகக் கூறி நாகராஜ், ராதாகிருஷ்ணன், மாதவன் உள்ளிட்டோரிடமிருந்து 86 லட்சம் ரூபாய் வாங்கி மோசடி செய்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
முதியவர் பவானி கொடுத்தப் புகாரின் அடிப்படையில் வழக்கறிஞர் சிவ அரவிந்தனை போலீசார் மீண்டும் நேற்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இவரிடம் எத்தனை முதியவர்களிடம் இது போல் மோசடி செய்துள்ளார் என தீவிர விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பிரபல ரவுடியும் மறைந்த அதிமுக முன்னாள் பிரமுகரின் மகனுமான அழகுராஜா கைது: பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடையவர் ரவுடி அழகுராஜா. கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஜாம்பஜார் பகுதியில் குடிபோதையில் ஒருவரை கத்தியால் தாக்கியதாக ஜாம்பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகு ராஜா (22) மற்றும் அவரது நண்பர் விஷ்ணு (22) ஆகிய இருவரையும் தீவிரமாகத் தேடி வந்துள்ளனர்.
இந்த நிலையில் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பெயரில் திருநின்றவூர் பகுதியில் தேவேந்திரன் என்பவரின் வீட்டில் பதுங்கி இருந்த பிரபல ரவுடி அழகுராஜா மற்றும் விஷ்ணு ஆகியோருக்கு அடைக்கலம் கொடுத்த தேவேந்திரன் ஆகிய 3 பேரையும் ராயப்பேட்டை காவல் உதவி ஆணையர் பாலமுருகன் தலைமையில் ஆய்வாளர் ராஜேஸ்வரி அடங்கிய தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
போலீசாரால் கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி அழகுராஜா மீது மைலாப்பூர், ஜாம்பஜார் உள்ளிட்டப் பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கைது செய்யப்பட்ட மூவரையும் சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனது தந்தையை கொலை செய்த பிரபல ரவுடியான சிவக்குமார் என்பவரை கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக அழகுராஜா கைது செய்யப்பட்டு சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வணிக வளாகத்தில் பெயின்டர் பலி: விழுப்புரம் மாவட்டம், முகையூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஐயப்பன் (37), மற்றும் கார்த்திகேயன் (41). இருவரும் சென்னையில் தங்கி பெயின்டிங் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக இருவரும் சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள ஸ்டார் பக்ஸ் வணிக வளாகத்தில் பெயின்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று வழக்கம் போல் கார்த்திகேயன் மற்றும் ஐயப்பன் இருவரும் 4வது மாடியில் பெயின்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஐயப்பன் கயிற்றில் தொங்கியவாறு வெளிப்பகுதியில் பெயின்ட் அடித்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கயிறு அறுந்ததில் ஐயப்பன் 4வது மாடியில் இருந்து விழுந்து படுகாயமடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கேஎம்சி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இரண்டு கால், இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த ஐயப்பன் இரவு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து சேத்துப்பட்டு போலீசார் கொலை இல்லாத மரணம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: வடசென்னையில் திமுக உட்கட்சி பூசல் - தொடர்குற்றங்களில் ஈடுபடும் திமுக கவுன்சிலரின் கணவர்