திறந்து கிடந்த மழை நீர் வடிகாலில் விழுந்து முதியவர் பலி: சென்னை மாநகராட்சி மண்டலம் 14ல் 185வது வார்டுக்கு உட்பட்ட நங்கநல்லூர் 18வது தெருவில் உள்ள மழை நீர் வடிகால் திறந்த நிலையில் இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று (செப்.5) உள்ளகரம் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் (84), பால் வாங்குவதற்காக அருகில் உள்ள கடைக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று வீடு திரும்பிய போது, இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைதடுமாறிய அவர், மழை நீர் வடிகால்வாயில் விழுந்தார்.
இதில், அவரது தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கியுள்ளார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். திறந்த நிலையில் இருந்த மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடன் தொல்லையால் விபரீத முடிவு: மடிப்பாக்கம் பி.ஓ.பி காலனியைச் சேர்ந்தவர் சுரேஷ் (45). இவர் நீலாங்கரையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர், நேற்று (செப்.5) வழக்கம்போல் வேலைக்குச் சென்று மாலை வீடு திரும்பிய நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சம்பவம் குறித்து வந்த மடிப்பாக்கம் போலீசார் சுரேசின் உடலைக் கைப்பற்றி குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி உடற்கூராய்விற்காக வைத்தனர். அதைத்தொடர்ந்து சுரேசின் மனைவி சுசித்ராவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில், சுரேசுக்கு கடன் தொல்லை அதிகமாக இருந்ததால் கடந்த சில நாட்களாக மனைவி, பிள்ளைகள் என யாரிடமும் அவர் சரியாகப் பேசாமல் இருந்ததாகக் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்த சுரேஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டார் என சுரேசின் மனைவி கூறியுள்ளார். இதனையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வழக்கு தொடர்ந்ததாக ஏமாற்றிய வழக்கறிஞர் தம்பதி மீது புகார்: சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்தவர் நந்தினி. இவர் தனது கணவர் பிரசாந்த்-க்கு, சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள தனியார் இருசக்கர வாகன ஷோரூமில் தவணை முறையில் இரு சக்கர வாகனம் ஒன்று வாங்கி உள்ளார். இந்நிலையில், புதிதாக வாங்கிய அந்த இரு சக்கர வாகனம் வாங்கிய மூன்று மாதத்திலேயே தொடர்ந்து பழுதாகி வந்துள்ளது.
இதனால் விரக்தி அடைந்த தம்பதியினர் இருசக்கர வாகனத்தையும், அதற்கு உண்டான ஆவணங்களையும் வாங்கிய பைக் ஷோரூமிலேயே திருப்பி ஒப்படைத்து உள்ளனர். அதைத் தொடர்ந்து, நந்தினி நுகர்வோர் நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு தொடர ஜேசுதாஸ், ஸ்ரீபிரியா என்ற வழக்கறிஞர் தம்பதியை அணுகி உள்ளார். பின்னர் நந்தினியிடம் வழக்கு தொடர்ந்ததாகக் கூறிய வழக்கறிஞர் ஸ்ரீபிரியா, நீதிபதிகளின் பெயரை பயன்படுத்தி போலி ஆவணங்களைத் தயார் செய்துள்ளார்.
மேலும் அதை நந்தினியிடம் கொடுத்த அவர் தங்களுக்கு ரூ.4 லட்சம் வர உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த நந்தினி, இது குறித்து நீதிமன்றத்தில் விசாரித்த போது அது போலியான உத்தரவு என்பது தெரியவந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வழக்கறிஞர் தம்பதியிடம் இதுகுறித்து கேட்ட போது, அதற்கு ஸ்ரீபிரியா, இதை வெளியில் சொல்ல வேண்டாம் என்றும், அதற்கு உண்டான பணத்தை நாங்கள் தருகிறோம் என்றும் கூறியநிலையில், அவரது கணவர் ஜேசுதாஸ் “ஆமாம் வழக்கு தொடரவில்லை. உங்களால் என்ன செய்ய முடியும்” என மிரட்டும் தொனியில் பேசி உள்ளார்.
இதனால் கோபமுற்ற நந்தினி, வழக்கறிஞர் தம்பதியின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். வழக்கறிஞர் தம்பதி மீது நந்தினி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போதையில் விழுந்த நபர் மீது அரசு பேருந்து ஏறியதில் பலி: சென்னை புளியந்தோப்பு பகுதியில் நேற்று (செப்.5) இரவு முப்பது வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மது போதையில் சாலையில் தள்ளாடி நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த நபர் சாலையின் நடுவே திடீரென நிலை தடுமாறி விழுந்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து ஒன்று அவர் மீது ஏறி, இறங்கியது.
இதில் அந்த நபர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். பின்னர் இது குறித்து தகவல் அறிந்த பெரியமேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அரசு பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலை செய்த வீட்டிலேயே வேலையைக் காட்டிய பெண்: சென்னை கே.கே.நகர் பகுதியை சேர்ந்த அலோசியஸ் ஜோசப் என்பவர் வடபழனி காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில் “கடந்த 13 ஆண்டுகளாக கே.கே.நகர் பகுதியில் வசித்து வரும் நான், தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் இணை பொது மேலாளராக பணி புரிந்து வருகிறேன்.
எனது வீட்டின் பீரோவில் இருந்த நகைகள் கடந்த சில மாதங்களாகக் காணாமல் போவதாக என் மனைவி தெரிவித்து வந்ததன் பேரில், எனக்கு போதிய நேரம் இல்லாததால் கணக்கு பார்க்காமல் இருந்து வந்தேன். கடந்த செப்.3ஆம் தேதி விடுமுறை என்பதால், நாங்கள் பீரோவில் இருந்த தங்க நகைகளை எடுத்து சரிபார்த்த போது, அதில் நீளமான ஆரம் ஒன்று, மாங்கா வடிவ ஆரம் ஒன்று, செயின் பிரேஸ்லெட் 2, வி ஆரம் 1, நீளமான செயின் 2, பேன்சி நெக்லஸ் 2 ஆகிய சுமார் 31 சவரன் பெருமான நகைகளைக் காணவில்லை.
அதனைத் தொடர்ந்து, வீட்டில் அனைத்து இடங்களிலும் தேடிப்பார்த்தும் கிடைக்காததால், எனது வீட்டில் வேலை செய்யும் பெண் சுமித்ராவிடம் கேட்ட போது பதில் ஏதும் சொல்லாமல் இருந்து விட்டார். அவர் மீது எனக்கு சந்தேகம் உள்ளது. எனவே அவரை விசாரணை செய்து என்னுடைய நகைகளை மீட்டுத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன்” என புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் போலீசார் அந்த வீட்டில் வேலை செய்து வந்த சுமித்ராவை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சுமித்ரா அந்த வீட்டில் பணிபுரியும் நேரத்தில் அவ்வப்போது சிறுக சிறுக வீட்டில் இருந்த நகைகளைத் திருடிச் சென்றதாகவும், தற்பொழுது தன்னிடம் 20 சவரன் நகைகள் மட்டுமே இருப்பதாகவும் போலீசாரின் விசாரணையில் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரிடமிருந்து நகைகளை பறிமுதல் செய்த போலீசார், வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மருத்துவ உபகரணங்கள் வழங்குவதாக ரூ.4.5 கோடி மோசடி: சென்னை வடபழனி பகுதியைச் சேர்ந்தவர் அரிக்குமார். இவர் அதே பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் மருத்துவ உபகரணங்கள் சப்ளை செய்யும் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதாக ஸ்ரீதர் மற்றும் காளையப்பன் ஆகியோர் அரிகுமாரை அணுகியுள்ளனர்.
அரிகுமாரின் நிறுவனத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்குவதாகக் கூறி, அதற்கான தொகையாக ரூபாய் 4.5 கோடி முன்பணமாக பெற்றுள்ளனர். இதையடுத்து நீண்ட நாட்களாகியும் மருத்துவ உபகரணங்கள் எதுவும் கொடுக்காமல் அலைக்கழித்து வந்துள்ளனர்.
இதையடுத்து, ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அரிக்குமார், இது குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்ட போலீசார் ரூ.4.5 கோடியை வாங்கிக் கொண்டு மோசடியில் ஈடுபட்ட ஸ்ரீதர், காளையப்பன் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதையும் படிங்க: கண் அசந்த நேரத்தில் செல்போன் திருட்டு : மர்ம நபர் கைவரிசை!