சென்னை: தமிழ்நாட்டில் உயர் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் 13 பல்கலைக்கழகங்கள் இயங்கி வரும் நிலையில், பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு திறந்து நிலை பல்கலைக்கழகம் ஆகிய இரண்டிலும் துணைவேந்தர்கள் பதவி காலியாக உள்ளன.
மீதமுள்ள 11 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களுடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழ்நாடு உயர் கல்வி மன்றத்தில் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, பாடத்திட்டம் மாற்றம், கல்வித் தரத்தை உயர்த்துவது, நான் முதல்வன் திட்டம் உள்ளிட்டப் பல்வேறு அம்சங்கள் குறித்தும் ஆய்வு செய்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, "உயர் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு கல்லூரி மண்டல இணை இயக்குநர்கள், கல்லூரி முதல்வர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து பல்கலைக் கழகத்துணை வேந்தர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. பாடத்திட்ட மாற்றம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
நான் முதல்வன் திட்டத்தில் அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதனைப் போன்று அனைத்து பல்கலைக்கழகங்களின் திறன் மேம்பாட்டுப்பயிற்சி அளிக்கும் வகையில், பாடத்திட்டம் குறித்து ஆய்வுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அரசு மற்றும் கலைக்கல்லூரியில் கணக்கு, இயற்பியல் பாடப்பிரிவில் மாணவர்கள் சேர்க்கை குறைவாக இருக்கிறது. எனவே, கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற பாடத்திட்டத்தை சேர்த்து கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. வருகின்ற கல்வி ஆண்டு முதல் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும்.
அனைத்து கல்லூரிகளிலும் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடம் கண்டிப்பாக 4 பருவத்திற்கு இருக்க வேண்டும். அனைத்துப் பல்கலைக்கழகத்திற்கும் பொதுவான பாடமாக கொண்டு வரவும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் வகையிலும், திறன் மேம்பாடு கிடைக்கும் வகையிலும் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படவுள்ளன.
பல்கலைக்கழகத்தில் தலைவர்கள் பெயரில் உள்ள இருக்கைகளில் அவர்கள் குறித்த ஆய்வு மேற்காெள்ளலாம். பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் முதுகலைப் பாடப்பிரிவு விரும்பும் கல்லூரியில் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படும். பச்சையப்பன் கல்லூரி விவகாரம் குறித்து நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதையே அரசு செயல்படுத்தும்.
முந்தைய ஆட்சிக்காலத்தில் நியமனம் செய்யப்பட்டவர்கள், அரசு உதவிபெறும் கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் நியமனம் செய்வது குறித்து சட்டம் மற்றும் விதிகள் உருவாக்கப்பட்டு, வரும் காலத்தில் அதன் அடிப்படையில் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
பல்கலைக் கழங்களில் ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கு 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அதிகமாக நியமனம் செய்யப்பட்டுள்ள பணியாளர்களை, வேறு கல்லூரியில் காலிப்பணியிடம் ஏற்படும்போது நியமித்துக் கொள்ளவும் அறிவுரை வழங்கி உள்ளோம்.
பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான அதிகாரம் தற்பொழுது வரையில் ஆளுநரிடம் தான் உள்ளது. காலியாக உள்ள பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை நியமனம் செய்வதற்கான தேடுல் குழு நியமிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஊழல் குற்றச்சாட்டு கூறியுள்ளது குறித்து கேட்டதற்கு பதிலளித்த அவர், ”தமிழ்நாடு மக்களுக்கு எல்லாம் தெரியும். தெரிந்து தான் மு.க. ஸ்டாலினை முதலமைச்சராக தேர்வுசெய்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரேஷன் அட்டைகளுக்கு ரூ.1000 - அரசாணை வெளியீடு!