சென்னை, கல்லூரி சாலையில் உள்ள டிபிஐ வளாகத்தில் பள்ளிக்கல்வித் துறை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கட்டடத்தில் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அலுவலகம் இயங்கி வருகிறது.
மேலும் இங்கு அரசு தேர்வுத்துறை, தனிக்கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம், தொடக்கக்கல்வித் துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் ஆகியவையும் தனிக்கட்டடங்களில் இயங்கி வருகின்றன. தமிழ்நாடு பாடநூல் கழக நிறுவனத்தின் கட்டடத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் இயங்கி வருகிறது.
இந்நிலையில், எம்ஜிஆர் நூற்றாண்டை முன்னிட்டு பள்ளிக்கல்வித் துறைக்கு என ஒருங்கிணைந்த கட்டடம் ஒன்று கட்டித்தரப்படும் என தமிழ்நாடு அரசு முன்னதாக அறிவித்திருந்தது.
அதனடிப்படையில் 40 கோடி ரூபாய் செலவில் ஆறு தளங்களைக் கொண்ட புதிய கட்டடம் தற்போது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டடத்தினை நாளை (செப்.19) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார். இந்தப் புதிய கட்டடத்திற்கு பள்ளிக்கல்வித் துறை எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டடம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இங்கு பள்ளிக்கல்வித் துறை ஆணையர் அலுவலகம், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் அலுவலகம், ஆசிரியர் தேர்வு வாரியம், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி இயக்குனரகம், கல்வி, தொலைக்காட்சி ஆகிய அலுவலகங்கள் செயல்பட உள்ளன.
இதையும் படிங்க : 'ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற எந்த தடையும் ஏற்படாது' - அமைச்சர் கடம்பூர் ராஜு