சென்னை: இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கு மத்திய, மாநில, உள்ளூர் வரிகளைத் திரும்ப செலுத்தும் (RoDTEP) திட்டம் ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கு முன்பு அமலில் இருந்த MIES எனும் இந்திய நிறுவனங்களின் ஏற்றுமதி ஊக்குவிப்புத் திட்டத்தால் இந்திய பொருள்களுக்குச் சர்வதேச சந்தையில் சமனற்ற வாய்ப்பு உள்ளதாகப் புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து உலக வர்த்தக சபையின் (WTO) சட்ட திட்டங்களுக்குள்பட்டு இந்தப் புதிய திட்டம் கொண்டுவரப்பட்டது.
முந்தைய திட்டம் ஏற்றுமதிகளுக்குச் சலுகைகளை வழங்கிய நிலையில், இந்தத் திட்டம் ஏற்றுமதி தயாரிப்புக்குத் பயன்படுத்தப்பட்ட மூலப்பொருள்களுக்குச் செலுத்தப்பட்ட வரிகளை மட்டுமே திரும்பச் செலுத்துகிறது.
இந்தத் திட்டம் குறித்து ஈடிவி பாரத் செய்திகளிடம் பேசிய இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பின் தமிழ்நாடு பிரிவுத் தலைவர் இஸ்ரார் அகமது, "இது வரவேற்கத்தக்கத் திட்டம் என்றாலும் இதனை அமல்படுத்துவதில் சில நடைமுறை பிரச்சினைகள் உள்ளன, அவை சரிசெய்யப்பட வேண்டும். முன்னர், குறிப்பிட்ட சில தொழில் துறையினருக்கு மட்டுமே உள்ளீட்டு வரி திரும்பச் செலுத்தப்பட்டது, தற்போது அனைத்து வகையான தொழில் துறைகளுக்கும் மூலப்பொருள்களுக்குச் செலுத்திய வரி திரும்ப கிடைக்கும்.
பழைய திட்டம் குறிப்பிட்ட ஏற்றுமதி துறைகளுக்கு மானியம் வழங்கும் நடைமுறையாக இருந்தது. இந்தத் திட்டம் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் சிறப்புத் திட்டமல்ல, ஏற்றுமதியாளர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய மூலப்பொருள்களான வரிப் பணம் கிடைக்கிறது. இதனால், இந்திய ஏற்றுமதி பொருள்கள் பன்னாட்டுச் சந்தையில் போட்டிபோட முடியும்.
இருப்பினும், எந்தெந்தப் பொருள்களுக்கு எத்தனை விழுக்காடு வரிப் பணம் திரும்பச் செலுத்தப்படும் என்பது குறித்து இந்த மாத இறுதியில்தான் அறிவிப்பு வருகிறது. வரியைத் திரும்பச் செலுத்துவதில் பல்வேறு கணக்கீடுகள் செய்ய வேண்டியுள்ளதால், இதற்குச் சிறிது காலம் எடுத்துக்கொள்ளும்" என்றார்.
இந்தத் திட்டம் தொடர்பாக பிரிக்காட் மெரிடியன் மேலாண் இயக்குநர் அஷ்வின் சந்திரன் பேசுகையில், "தற்போதுதான் இத்திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் இது தொடர்பான விதிமுறைகள் ஏற்றுமதியாளர்களுக்கு முழுமையாகத் தெரியவில்லை. இதற்கு முன்பு இருந்த MIES, Duty drawback மற்றும் RoSCTL ஆகிய மூன்று திட்டங்களுக்கு மாற்றாகப் புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
முந்தைய திட்டங்களில் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் மின்சாரம், எரிபொருள் உள்ளிட்டவற்றைத் திரும்பப் பெற முடியாது. தற்போது புதிய திட்டத்தில் அவற்றிற்கான பணத்தைத் திரும்பப் பெற இயலும். அதேபோல், முன்பு பின்னலாடைத் துறையில் நூலுக்கான வரியைத் திரும்பப் பெற முடியாது.
புதிய RoDTEP திட்டத்தில் நூலிலிருந்து, அனைத்து வகையான ஆடை ஏற்றுமதிக்கும் உள்ளீட்டு வரியைத் திரும்பப் பெற முடியும். மதிப்புக்கூட்டுப் பொருள்களுக்கு, அவற்றின் மதிப்புக்கு ஏற்ற விழுக்காட்டில் வரியைத் திரும்பத் தர வேண்டும் எனக் கோரியிருக்கிறோம். திரும்பப் பெறும் வரிச் சலுகைகளின் அளவு தற்போது உள்ள அளவைவிட குறைவாக இருக்காது என நம்புகிறோம்" என்றார்.
திருப்பூரைச் சேர்ந்த பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் ஊக்குவிப்பு கூட்டமைப்புத் தலைவர் சக்திவேல் பேசுகையில், "பழைய நடைமுறையுடன் ஒப்பிடுகையில் இது சாதகமான திட்டம். பின்னலாடை நிறுவனங்கள், தங்களது உற்பத்திக்குப் பயன்படுத்தும் மின்சாரம், ஜெனரேட்டர்களுக்குப் பயன்படுத்தும் டீசல், பல்வேறு மூலப்பொருள்களுக்கான ஏறக்குமதி வரி, மத்திய, மாநில, உள்ளூர் வரிகளை மொத்தமாகக் கணக்கிட்டு அதற்கேற்ப அரசு வரியைத் திரும்பச் செலுத்துகிறது.
சலுகையாக வழங்காமல் உற்பத்தி, அதற்கு ஏற்படும் செலவுக்கு ஏற்ப பணத்தை மத்திய அரசு திரும்பச் செலுத்துகிறது. இதற்காகப் பல்வேறு தரவுகளைச் சேகரித்து மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளோம்" என்றார்.
மத்திய அரசு உள்ளீட்டு வரியை திரும்பச் செலுத்துவது மட்டுமே போதுமானதாக இருக்காது என சிறு, குறு, நடுத்தர நிறுவன ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர். இது குறித்துப் பேசிய டான்ஸ்டியா சென்னை பிரிவு பொதுச் செயலாளர் வாசுதேவன், "ஜிஎஸ்டி அமலப்படுத்தப்பட்ட காலகட்டத்தில் மூலப்பொருள்களுக்கும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் அந்த நேரத்தில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் ஏற்றுமதி 10 விழுக்காடு வரை சரிவை சந்தித்தது.
பின் RoDTEP திட்டத்தின்படி வரி திரும்பச் செலுத்தப்பட்டது. ஆனால், இதன்மூலம் பணத்தை திரும்பப் பெற நீண்ட காலமானது. பல நேரங்களில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மூலப்பொருள்களுக்குச் செலுத்திய வரியை கையில் பெற 2 முதல் 3 மாதங்கள் ஆகும். சில நேரங்களில் 6 மாதங்கள்வரை காத்திருக்க வேண்டியிருந்தது. மேலும், பல பொருள்களுக்கு 1.8 விழுக்காடு முதல் 2 விழுக்காடு என சொற்ப அளவிலேயே வரி திரும்பச் செலுத்தப்பட்டு வழங்கப்பட்டுவந்தது.
இந்தப் புதிய ஏற்றுமதி வரித் திட்டத்தில் பணம் விரைவில் கைக்கு வந்துவிடும். ஆனால், இந்திய சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளுடன் சர்வதேச சந்தைகளில் போட்டியிட இது மட்டுமே போதுமானதாக இருக்காது. தற்போது வழங்கப்படுவது எங்களுக்கு வழக்கமாக வழங்க வேண்டிய உரிமை.
இவற்றுடன் கூடுதலாக சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் ஏற்றுமதிக்கு 10 விழுக்காடு மானியம் அளிக்க வேண்டும். உலக வர்த்தக சபை விதிகளுக்குள்பட்டு மானியங்களை வழங்க வேண்டும். சிறு, குறு நிறுவனங்களுக்கு துருக்கி அரசு 15 முதல் 20 விழுக்காடு வரை உற்பத்தி மானியம் அளிக்கிறது.
அதேபோல சீனா 10 விழுக்காடு மானியம் வழங்குகிறது. இதுபோன்ற காரணங்களால் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து எங்களால் ஆர்டர்களைப் பெற முடியவில்லை" எனக் கருத்து தெரிவித்தார்.
முந்தைய திட்டத்தைவிட RoDTEP மிகவும் எளிமையானது என்றும் அவர் குறிப்பிட்டார். ஆம்பூர் பகுதியில் காலணி ஏற்றுமதியில் ஈடுபட்டுவரும் கலீல் நிப்ராஸ் இது குறித்துப் பேசுகையில், "பழைய திட்டத்தில் 6 மாதங்களுக்கு மேலாகியும் பணம் திரும்பக் கிடைக்கவில்லை, டிசம்பர் மாதம் ஏற்றுமதி செய்ததற்கு தற்போது விண்ணப்பிக்கவே முடியவில்லை.
புதிய திட்டத்தில் வேகமாக கையில் பணம் வந்து சேர்ந்துவிடும். மேலும், இதில், எளிமையான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. ஆனால், பன்னாட்டு நிறுவனங்களுடன் மோதுவதற்கு மத்திய அரசு கூடுதல் ஏற்றுமதி சலுகைகள் வழங்க வேண்டும்.
தற்போதைய சூழலில் வங்கதேசத்துடன்கூட நம்மால் போட்டிபோட முடியவில்லை. பல்வேறு ஐரோப்பிய நாடுகளுடன் வங்கதேசம் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதால் அவர்கள் ஏற்றுமதிக்கு ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுக்கு வரி கிடையாது.
அதேசமயம், இந்திய பொருள்களுக்கு 4.5 விழுக்காடு இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. தற்போது ஐரோப்பிய ஒன்றிய சந்தையிலிருந்து பிரிட்டன் வெளியேறியுள்ளது. இதுபோன்ற நேரங்களில் இந்திய ஏற்றுமதியாளர்களுக்குச் சாதகமான வர்த்தக உடன்படிக்கைகளை மேற்கொள்ள இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி செய்ய புதிய கட்டுப்பாடு