சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவல் அதிகரித்தபோது, சிறைவாசிகளுக்குத் தொற்றுப் பரவலைத் தடுக்கும் விதமாக சிறைத்துறை கடந்த ஜனவரி 13ஆம் தேதி முதல் சிறைவாசிகளுக்கான நேர்காணல்களை தற்காலிகமாக ரத்துசெய்து உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து, தொற்றுப் பரவல் படிப்படியாகக் குறைந்து, இயல்பு நிலைக்குத் திரும்பியதால், பிப்ரவரி 8ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய நேர்காணலுக்கு அனுமதிக்கப்பட்டது.
அதனடிப்படையில், ஒரு நேரத்தில் ஒரு பார்வையாளர் மட்டும் 15 நாள்களுக்கு ஒரு முறை சிறைவாசிகளை நேர்காணல் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைத் தளர்த்தி புதிய வழிகாட்டுதல்களை சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, சிறைவாசிகளுக்கு வாரம் ஒருமுறை நேர்காணலுக்கு அனுமதி வழங்கப்படும். இனிவரும் நாள்களில் சிறைவாசிகளை நேர்காணல் செய்ய இரண்டு பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும். மேலும் சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாள்களைத் தவிர்த்து மற்ற நாள்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நேர்காணலுக்குப் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
நேர்காணலின் போது, பார்வையாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் நேர்காணல் மனுவுடன் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான ஆவணம் அல்லது 72 மணி நேரத்திற்குள் கரோனா நெகட்டிவ் சான்றிதழையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
ஏற்கனவே, சிறைவாசிகள் நேர்காணலுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தனியார் மருத்துவக் கல்லூரியில் 50% இடங்களுக்கு அரசின் கட்டணம் வசூலிக்க வேண்டும்