மோட்டார் வாகன புதிய சட்டம்-2019, நாடு முழுவதும் கடந்த ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
இந்த சட்டம் அமலுக்கு வந்த நாள் முதல் இன்று வரை இரு சக்கர வாகன ஓட்டிகள் முதல் லாரி உரிமையாளர்கள் வரை அனைத்து தரப்பினரிடமும் கடும் எதிர்ப்பு எழுந்துவருகிறது. இதற்கு முன்பு ரூ.50 , ரூ.100 என வசூலிக்கப்பட்ட போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராதத் தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டுவிட்டது.
அதன்படி உரிய லைசென்ஸ் இல்லாமல் வாகனங்களைச் செலுத்தும் வாகன ஓட்டிகளுக்கு நூறு ரூபாயாக இருந்த அபராதத் தொகை ஆயிரம் ரூபாயாகவும், மொபைல் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் 5,000 ரூபாய் வரையும் அபராதம் உயர்த்தப்பட்டது.
காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ. 2 ஆயிரம் அபராதம் அல்லது 3 மாத ஜெயில் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும். அமல்படுத்தப்பட்ட இந்த புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை எதிர்த்து, டெல்லி வாகன ஓட்டிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.
இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்திலுள்ள நாமக்கள் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற தீபாவளி சிறப்பு பேருந்து இயக்கம் குறித்த போக்குவரத்து மண்டல அதிகாரிகள் மற்றும் காவல் துறையினருடன் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக் கூட்டத்தில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைப்பது, போக்குவரத்து நெரிசலின்றி பண்டிகை காலங்களில் பேருந்துகள் இயக்குவது மற்றும் முன்பதிவு உள்ளிட்ட அம்சங்கள் குறித்த கருத்து கேட்கப்பட்டது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், ‘புதிய மோட்டார் வாகன சட்டத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டில் அபராத தொகையை குறைத்து அரசாணை வெளியிடப்படும் என்றும் அபராத தொகையை குறைத்து வெளியிடுவது தொடர்பாக முதலமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இது தொடர்பாக அரசாணை விரைவில் வெளியிடப்படும்’ என்றார்.
இதையும் பார்க்க: மாட்டு வண்டிக்கும் மோட்டார் வாகனச் சட்டமா?