சென்னை: ஐஐடி வளாகத்தில், ஆயிரத்து 200 மாணவர்கள் தங்கும் வகையில் கட்டப்பட்ட மாணவர்கள் விடுதி இன்று (பிப்ரவரி 21) திறந்துவைக்கப்பட்டது. 10 தளங்களுடன் 32 ஆயிரத்து 180 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்தக் கட்டடம் பசுமைக் கட்டடங்களுக்கான நான்கு நட்சத்திரத் தகுதியைப் பெற்றுள்ளது.
மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்கும்விதமாக வடிவமைத்துக் கட்டப்பட்டுள்ள இந்தப் பசுமைக் கட்டடத்தில் சூரிய சக்தி மின் உற்பத்தித் தகடுகள், சூரிய சக்தியால் இயங்கும் நீரைச் சூடேற்றும் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மாணவர்கள் அறை மட்டுமின்றி, விடுதி காப்பாளர்கள், உதவிக் காப்பாளர்களுக்கான அலுவலக அறைகள், குடியிருப்புகள், விருந்தினர் அறை, உடற்பயிற்சி மையம், சலவை அறைகள், பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், ஸ்னூக்கர், கேரம் போர்ட் போன்ற விளையாட்டுகளுக்கான அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கெனத் தனியாக 10 அறைகளும் இதில் ஒதுக்கப்பட்டுள்ளன. விடுதி திறப்பு விழாவில் பேசிய ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடி, ஐஐடி வளாகத்தில் மாணவர்களுக்கென உயர்தர தங்கும் வசதி செய்துகொடுக்கப்பட்டு இருப்பதில், ஐஐடி நிர்வாகம் மிகுந்த பெருமிதம் அடைகிறது.
தோட்டங்கள், கழிவறைகளுக்கு மறு சுழற்சி செய்யப்பட்ட நீரைப் பயன்படுத்துவதன் மூலம் நீர்ப் பயன்பாடு குறைக்கப்பட்டிருப்பதுடன் நிலத்திலும், கட்டடத்தின் மேல் தளத்திலும் விழும் மழைநீரைச் சேகரித்துச் சுத்திகரிப்பு செய்து குடிநீருக்குப் பயன்படுத்தப்படுகிறது எனத் தெரிவித்தார்.
விடுதிக் கட்டடத்தின் ஒவ்வொரு அறை, நடைபாதைகளில் இயற்கையான வெளிச்சம் கிடைக்கும் வகையில், வடிவமைக்கப்பட்டு இருப்பதுடன், மாணவர்கள் இயற்கையான முறையில் ஓய்வெடுக்கும்விதமாக, ஒளி புகக்கூடிய மேற்கூரைகளைக் கொண்ட பகுதி ஒன்றும், கூடைப்பந்து, கைப்பந்து, கிரிக்கெட் விளையாட்டு மைதானங்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இதையும் படிங்க: தயாரிப்பாளர் அன்புசெழியன் இல்ல திருமண விழா - ரஜினி, கமல் நேரில் வாழ்த்து