சென்னையில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டு வரும் காவல் துறையினர், வாகன ஓட்டிகளிடமிருந்து லஞ்சம் பெறுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வந்ததால், போக்குவரத்து காவலர்கள் அபராத தொகையை வசூல் செய்யும் முறையை டிஜிட்டலாக முன்னாள் காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் மாற்றினார். இருப்பினும் சில வாகன ஓட்டிகள் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி சாலை விதிகளை மதிக்காமல் போக்குவரத்து காவல் துறையினரை மிரட்டுவதாக கூறப்பட்டது. இதனால் காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், புதிய அபராதம் வசூல் முறையை அமல்படுத்தியுள்ளார்.
புதிய திட்டத்தின்படி, சென்னையில் தடை செய்யப்பட்ட இடங்களில் விதிகளை மீறி வாகனங்களை நிறுத்தி செல்லும் நபர்களின் வாகனங்கள் மீது போக்குவரத்து ஆய்வாளர்கள் அபராத தொகை ரசீதை ஒட்டி செல்லும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இதனால், போக்குவரத்து காவலர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையே ஏற்படும் தகராறு தடுக்கப்படும் என திருவல்லிக்கேணி போக்குவரத்து உதவி ஆய்வாளர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.