சென்னை: தென்கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் ஒரே மாதத்தில் மூன்றாவது முறையாக உருவாகும் இந்தப் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் நவம்பர் 25 முதல் 27ஆம் தேதிவரை சில இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (நவம்பர் 23) மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்கூடிய கனமழையும், ஏனைய தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் - புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், இதர வட மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நவம்பர் 24ஆம் தேதி ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்கூடிய கனமழையும், ஏனைய தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் - புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன்கூடிய மிதமான மழையும், வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நவம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்கூடிய கன முதல் மிக கனமழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன்கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.
இதையும் படிங்க: கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்; நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்