வழக்கறிஞர் இல்லாமல் பொதுமக்களே நீதிமன்றத்தில் ஆஜராகி தங்கள் வழக்கில் வாதாடி வந்த நிலையில், தற்போது சென்னை உயர் நீதிமன்றம் அதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து புதிய நடைமுறைகளை கொண்டு வந்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசிதழில் கூறியிருப்பதாவது:
’ஒருவர் வழக்கில் வழக்கறிஞர்களை நியமிக்காமல், தாமாகவே ஆஜராகி வாதிட வேண்டுமென்றால், முதலில் அதற்கு அனுமதி கோரி மனு ஒன்றை அளிக்க வேண்டும். அந்த மனுவில் நோட்டரி வழக்கறிஞர் அல்லது நோட்டரி ஆணையர் கையொப்பம் இட வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட நபர் ஏன் வழக்கறிஞர்களை நியமிக்கவில்லை என்பதற்கான காரணத்தைத் தெரிவிக்க வேண்டும்.
இந்நிலையில், வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவும் வகையில் வழக்கறிஞர் ஒருவரை நியமிக்கும்பட்சத்தில் எந்தவித நிபந்தனையுமின்றி அதை வழக்கு தொடர்பவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். முகவரிக்காக புகைப்படத்துடன் கூடிய ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம், சமீபத்தில் எடுத்த புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, மொபைல் எண், மின் அஞ்சல் போன்றவற்றை குறிப்பிட வேண்டும்.
இதற்காக குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது. இந்த குழு மனுவை விசாரித்து, வழக்கு தொடர்பவர் ஆஜராகி வாதிடலாமா, இல்லையா என்பதை முடிவெடுக்கும். மனு தாக்கல் செய்துள்ளவர் இலவசமாக சட்ட உதவி பெற தகுதி பெறும் நபராக இருந்தால், இலவச சட்ட உதவிகளை அளித்து வரும் வழக்கறிஞர்கள் மூலம் மனுவை தாக்கல் செய்ய பரிந்துரை செய்ய வேண்டும். அந்த குழு மனுவை பரிசீலித்து ஒருவரை வாதிட அனுமதிக்கப்படும்பட்சத்தில் அந்த நபர் சட்ட விதிகளுக்கு உட்பட்டு, நீதிமன்ற ஒழுக்கத்திற்குக் கட்டுப்பட்டு நடந்துகொள்ள வேண்டும். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏதேனும், வழக்கு தொடர்ந்தவர் மீது எடுத்தால், அதற்கு அபராதம் கட்ட முடியுமா, அல்லாத முன் பணமாக செலுத்த முடியுமா என்பதையெல்லாம் குழு கேட்டறிந்து கொள்ள வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் வாசிங்க : ஹாங்காங்கில் பயங்கரம்: பொதுவெளியில் நபர் தீமூட்டி எரிப்பு !