தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை பாதிப்பைக் கட்டுப்படுத்த, கடந்த மாதம் 10ஆம் தேதிமுதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் தொற்று பாதிப்பு குறையாததால், தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு மே 24ஆம் தேதி அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த ஊரடங்கு வருகிற 7ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சராசரியாக நாள்தோறும் 23 ஆயிரம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
தற்போது அமலில் உள்ள முழு ஊரடங்கு, நாளை மறுநாள் முடிவடையவுள்ள நிலையில், நேற்று (ஜூன் 4) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், தலைமைச் செயலர், சுகாதாரத் துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
அதில், கரோனா தொற்று பாதிப்பு அதிகமாகவுள்ள மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்றும், தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கலாம் எனவும் சுகாதாரத் துறை பரிந்துரைத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல, கரோனா தொற்று தீவிரமாகவுள்ள 10 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
எனவே, ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு, இன்று (ஜூன் 5) வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஊரடங்கு நீட்டிப்பா அல்லது தளர்வுகளுடன் ஊரடங்கா என்பதை அறிய மக்கள் ஆவலோடு உள்ளனர்.