சென்னை: தமிழ்நாட்டில் ரூ.115 கோடியில், 10 புதிய பேருந்து நிலையங்கள் அமைப்பதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு இன்று (டிச.16) வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் 2 மாநகராட்சிகள் மற்றும் 8 நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள் கட்ட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் ஒருபகுதியாக, திருப்பூரில் ரூ.26 கோடியிலும் மற்றும் ஓசூரில் ரூ.30 கோடி மதிப்பிலும் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அரியலூர், வேதாரண்யம், மேலூர், பட்டுக்கோட்டை, குளச்சல், பொள்ளாச்சி உள்ளிட்ட 8 நகராட்சிகளிலும் புதியபேருந்து நிலையங்கள் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2022-23ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடரின்போது, 'சில மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்படும்' என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார். இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக அரசுக்கு நகராட்சி நிர்வாக இயக்குநர் கடிதம் எழுதினார்.
அதில், 'கட்டப்படும் பேருந்து நிலையம், பொதுமக்கள் கழிப்பிடம், சுற்றுச்சுவர், கடைகள், வாகன நிறுத்தப் பகுதி ஆகிய வசதிகளுடன் கட்டப்பட வேண்டும். இதற்கான நிதிகளை முறையே, தூய்மை இந்தியா திட்டம், 15-வது நிதிக்குழு பரிந்துரை, கடை ஏலத் தொகை, உள்ளாட்சி அமைப்பின் நிதி ஆகியவற்றின் மூலம் பெறலாம்.
அதன்படி, திருப்பூர், ஓசூர் ஆகிய 2 மாநகராட்சிகளிலும், கூடலூர் (டி), அரியலூர், வடலூர், வேதாரண்யம், மேலூர், பட்டுக்கோட்டை, கொளச்சல், பொள்ளாச்சி ஆகிய 8 நகராட்சிகளிலும் ரூ.115.37 கோடி செலவில் புதிய பேருந்து நிலையங்களை அமைக்கலாம்' என்று அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார். அதை கவனமுடன் பரிசீலித்த அரசு, நகராட்சி நிர்வாக இயக்குநர் குறிப்பிட்ட 10 பஸ் நிலையங்களை கட்டுவதற்கு ரூ.115.37 கோடிக்கான நிர்வாக ஒப்புதலை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: TNPSC Annual planner: இவ்வளவு தான் வேலையா? குரூப்-1, குரூப்-2 எங்கே? கொதித்தெழுந்த இளைஞர்கள்!