மருத்துவர் சௌந்தரராஜன் கோவை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்கும்போது முதல் மாணவராகத் தேர்ச்சிப்பெற்று பல தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். அதுமட்டுமின்றி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.டி. படிப்பில் முதல் மாணவராகத் தேர்ச்சிபெற்று முன்னாள் கல்வி அமைச்சர் அரங்கநாயகம் கையால் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசையின் கணவரான, மருத்துவர் சௌந்தரராஜன் படிக்கும்போது மட்டுமின்றி பணியிலும் சிறப்பாகவே செயல்பட்டுவருகிறார். அப்படி மருத்துவர் சௌந்தரராஜன் சிறுநீரக மருத்துவத் துறையில் 35 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் வாய்ந்தவர். இவர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதன்முதலில் சிறுநீரகத் துறையை ஆரம்பித்து ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார்.
பிறகு சென்னை கீழ்ப்பாக்கம் அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை முன்னின்று நடத்தினார். அரசுத் துறையில் 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிவிட்டு 20 ஆண்டுகள் சென்னை ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுநீரகத் துறையை ஆரம்பித்து, 20 ஆண்டுகள் அங்கு சிறுநீரகத் துறை தலைவராகப் பணியாற்றினார்.
அங்கே முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும், மூளை மரணம் ஏற்பட்டவர்களுடைய சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை இந்தியாவிலேயே இரண்டாவதாகச் செய்தார்.
அதுமட்டுமின்றி எய்ட்ஸ் நோயாளிக்கு இந்தியாவிலேயே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த பெருமையும், உலகத்திலேயே முதன்முறையாக பாம்பு கடியால் பாதிக்கப்பட்டவரின் சிறுநீரகத்தை எடுத்து வெற்றிகரமாகப் பயன்படுத்திய பெருமையும் இவரையே சாரும். 10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டின் சிறந்த சிறுநீரக மருத்துவர் யார்? என்று சன் தொலைக்காட்சி நடத்திய கருத்துக்கணிப்பில் தமிழ்நாட்டின் தலைசிறந்த சிறுநீரக மருத்துவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும், ஆனந்த விகடனில் "துப்புரவுத் தொழிற்சாலை" என்ற சிறுநீரக விழிப்புணர்வு என்ற தொடரை எழுதியுள்ளார். அதுமட்டுமின்றி 200-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ள இவர், அமெரிக்கா, லண்டன், ஆஸ்ரேலியா போன்ற வெளிநாடுகளில் மருத்துவப் பல்கலைக்கழக கருத்தரங்கில் கலந்துகொண்டுள்ளார்.
ரஜினிகாந்திற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரக சிகிச்சைக்காக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவரது சிறுநீரக சிகிச்சையில் முன்னின்று பங்கேற்றவர். மேலும் அவருடன் சிங்கப்பூர் சென்று 10 நாள்கள் தங்கியிருந்து சிங்கப்பூர் எலிசபெத் மருத்துமனையில் நடைபெற்ற 10 நாள் சிறுநீரக சிகிச்சையிலும் பங்கேற்றவர். மேலும் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர், கருணாநிதி உள்ளிட்டவர்களின் சிறுநீரக சிகிச்சையிலும் பங்கேற்றுள்ளார்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை முன்னின்று நடத்திய இவர், ஏராளமான இலவச சிறுநீரக மருத்துவ முகாம்களை சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி போன்ற பகுதிகளில் நடத்தியுள்ளார். மேலும் முப்பதுக்கும் மேற்பட்ட சிறுநீர மருத்துவ வல்லுநர்களை உருவாக்கியும், 12 பேருக்கு முனைவர் பட்ட ஆய்விற்கு மேற்பார்வையாளராகவும் இருந்துள்ளார்.
மருத்துவர் சௌந்தரராஜன் தற்போது சண்டிகர் (PGIMR) பட்டமேற்படிப்பு அகில இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக நிர்வாகக்குழு உறுப்பினராக, இருந்துவருகிறார். மேலும் ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் சிறுநீரக வல்லுநராகவும், காஞ்சிபுரம் சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கௌரவ சிறுநீரக ஆலோசகராகவும் பணியாற்றிவருகிறார்.
முப்பதுக்கும் மேற்பட்ட சிறுநீர மருத்துவர்களை உருவாக்கிய ஆசிரியர் என்ற பெருமைக்குரிய பிரபல சிறுநீரக மருத்துவர் சௌந்தரராஜனுக்கு டெல்லியில் உள்ள மூத்த மருத்துவ வல்லுநர்களின் குழுமமான அவதார் நிறுவனம் துரோணாச்சாரியார் விருது வழங்கி கௌரவித்துள்ளது.
நேற்று (செப். 18) காணொலி வாயிலாக நடைபெற்ற பிரபல சிறுநீரக வல்லுநர்களின் மாநாட்டில் சிறுநீரக மருத்துவர் சௌந்தரராஜன் துரோணாச்சாரியார் விருதை பெற்றுக்கொண்டார்.
இந்த விருது இதற்கு முன்பு தமிழ்நாட்டில் சென்னை அப்போலோ பிரபல சிறுநீரக மருத்துவர் எம்.கே. மணி வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை - அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்