சென்னை: நுங்கம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சந்தேகப்படும்படியான நபர்கள் காரில் சுற்றித்திரிவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நுங்கம்பாக்கம் காவல் துறையினர் ரோந்து வாகனத்தில் சம்மந்தப்பட்ட காரைத் தேடினர். அப்போது அந்தக் கார் மேயர் சிவசண்முகம் சாலை பகுதியில் உள்ள தனியார் விடுதியின் முன்பு நிற்பதைக் கண்டுபிடித்தனர். பின்னர் விடுதியின் உள்ளேயிருந்து வந்த நபர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்து தகராறில் ஈடுபட்டனர்.
4 பேர் ஓட்டம்
காவல் துறையினர் அந்த காரை சோதனையிட முற்பட்டபோது கத்தியைக்காட்டி தகாத வார்த்தைகளால் திட்டி கொன்றுவிடுவேன் என அவர்கள் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து காவல் துறையினர் அவர்களை பிடிக்க முற்பட்டபோது 4 பேர் தப்பிச் சென்றனர். பின்னர் கார் ஓட்டுநரை உதவி ஆய்வாளர் மருது மடக்கிப்பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினார்.
தொழிலதிபரைக் கடத்த முயற்சி
விசாரணையில் அந்த நபர் தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகர் பகுதியைச் சேர்ந்த செல்வமணி என்பதும், பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரைக் கடத்துவதற்காக பெயர் தெரியாத நபர் ஒருவரால் வரவழைக்கப்பட்டதாகவும் வாக்குமூலம் அளித்தார்.
மேலும் விசாரணையில், செல்வமணியுடன் வந்து தப்பிசென்றவர்கள் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ரவுடிகளான கணேஷ், உதயபாண்டியன், பரமசிவம், முருகன் என்பதும் தெரியவந்தது. இதில் கணேஷ் மீது இரட்டைக் கொலை வழக்கு உள்ளிட்ட குற்றவழக்குகளும், மற்றவர்கள் மீதும் பல குற்ற வழக்குகளும் நிலுவையில் இருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
தனியார் விடுதி
அதனைத்தொடர்ந்து காவல் துறையினர் அவர்கள் தங்கியிருந்த தனியார் விடுதியில் நடத்திய விசாரணையில், அவர்கள் தங்கியிருந்த அறை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபரான கணேசன் என்பவர் பெயரில் எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவரையும் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பெயர் தெரியாத நபரின் அறிவுறுத்தல் அடிப்படையில் அறை எடுத்ததாகவும், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது அடுத்த உத்தரவு வரும்போதே தங்களுக்கு தெரியவரும் எனவும் வாக்குமூலம் அளித்தார்.
காவல் உதவி ஆய்வாளருக்குப் பாராட்டு
பின்னர் கைது செய்த இருவரையும் காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தப்பியோடிய நெல்லையைச் சேர்ந்த ரவுடி கணேசன் என்பவரைப் பிடித்தால் மட்டுமே வந்தவர்கள் யாரை எப்படி கடத்த திட்டமிட்டார்கள் என்பது குறித்த முழு விவரங்களும் தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தப்பியோடிய ரவுடிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ரவுடிகளை தனியாக துரத்திச்சென்று பிடித்த காவல் உதவி ஆய்வாளர் மருதுவை காவல்துறை உயர் அலுவலர்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ரீசார்ஜ் செய்யும்போது கிடைத்த சிறுமியின் செல்பேசி எண்ணை வைத்து காதல் டார்ச்சர்: 3 பேர் போக்சோவில் கைது