தமிழ்நாடு அரசானது அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை நீட் தேர்வுக்கு தயார் செய்ய பள்ளிக் கல்வித் துறை சார்பில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.
அதன்படி சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பில் ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களுக்கு தகுதித் தேர்வு நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறும் திறமையான மாணவர்களுக்கு இன்று முதல் ஆன்லைன் மூலம் நீட் பயிற்சி தொடங்கப்பட்டது. இந்த பயிற்சியினை ராஜஸ்தானைச் சேர்ந்த ஈடூஷ் இந்தியா என்ற கல்வி நிறுவனம் மூலம் ஆன்லைனில் நடத்துகிறது.
இந்தப் பயிற்சி வகுப்பினை பள்ளி கல்வித் துறை இணை இயக்குனர் சுகன்யா, துணை இயக்குனர் அனிதா, சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் தொடக்கிவைத்தனர். இதில் ஈடூஷ் இந்தியா நிறுவனத்தின் பொது மேலாளர் அசிஷ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
இதுகுறித்து எம்ஜிஆர் நகர் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சண்முகவேல் கூறும்போது, ’ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களுக்கு ஈடூஷ் இந்தியா நிறுவனத்தின் மூலம் நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் பயிற்சியானது ஆன்லைன் மூலம் அளிக்கப்படுகிறது. இதனை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.