மருத்துவக் கல்லூரிகளில் நிரப்பப்படாத என்.ஆர்.ஐ. இடங்களை கவுன்சிலிங் மூலம் நிரப்பக்கோரி தீரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அடங்கிய அமர்வு, தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுதோறும் எத்தனை இடங்கள் நிரப்பப்பட்டன? தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை எத்தனை?
தனியார் கல்லூரிகளுக்கு மட்டும் அதிக இடங்கள் ஒதுக்கப்பட காரணம் என்ன? நீட் முறைகேடு தொடர்பாக மாணவர்களை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? அலுவலர்கள் சரியாக கண்காணிக்காத நிலையில் மாணவர்களுக்கு தண்டனை வழங்குவதா? மாணவர்களின் சேர்க்கையில் மோசடியை தவிர்க்க ஒருங்கிணைந்த குழுவை அமைத்து கண்காணிக்க மத்திய மாநில அரசுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது.
தனியார் நீட் பயிற்சி மையத்தில் படித்து எத்தனை மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். முதல் முயற்சியில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் இரண்டு அல்லது மூன்று முறை முயற்சி செய்து தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்" என சிபிசிஐடிக்கு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்திய மருத்துவக் கவுன்சில் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நீட் தேர்வு எழுதுவதற்கு முன்பு தேர்வு எழுத வரும் மாணவர்களிடம் கைரேகை பதிவு செய்யப்பட்டுள்ளது. கைரேகை பதிவு ஆவணங்கள் அனைத்தும் சிபிசிஐடிக்கு வழங்கப்பட்டுவிட்டன. நீட் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற நான்காயிரம் மாணவர்களில் 54 மாணவர்கள் மட்டும் எந்த மருத்துவக் கல்லூரியிலும் சேரவில்லை என தெரிவித்தார்.
வழக்கறிஞர்களின் வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக ஏற்கனவே மாணவர்கள் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில், கைரேகை பதிவு செய்ய சிபிசிஐடிக்கு கூடுதல் கால அவகாசம் வழங்க முடியாது. தேசிய தேர்வு முகமையிடம் பெற்ற ஆவணங்களை பெற்று நீட் தேர்வின் போது மாணவர்கள் பதிவு செய்த கைரேகை பதிவை மீண்டும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி மற்றும் தடயவியல் துறைக்கு உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.