மருத்துவ கல்லூரிகளில் நிரப்பப்படாத என்ஆர்ஐ இடங்களை நிர்வாக ஒதுக்கீடுக்கு கொடுக்காமல், கவுன்சிலிங் மூலம் நிரப்பக்கோரி தீரன் என்பவர் தொடர்ந்த வழக்கில், நீட் ஆள்மாறாட்ட விவகாரம் குறித்து தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் செப்டம்பர் 25ஆம் தேதி கேள்வி எழுப்பியிருந்தனர். அதில்,
- எத்தனை பேர் ஆள் மாறாட்டம் மூலம் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை?
- நீட் தேர்வு எழுதியவர்களின் அடையாளம், மாணவர் சேர்க்கை பெற்றவர்களின் அடையாளத்தை சரிபார்த்தார்களா?
- ஆள்மாறாட்டம் மற்றும் மோசடி தொடர்பாக வேறு வழக்குகள் பதிவுசெய்யபட்டுள்ளதா?
- தேனி மாணவன் குறித்த விசாரணையின் நிலை என்ன?
- மோசடி மூலம் மாணவர் சேர்க்கை பெற்றுள்ளார் என தெரிந்தும் தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது உண்மையா?
- நீட் தேர்வுக்கு மாணவரை சோதித்து அனுப்பியது முதல் அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளதா?
- இரட்டை இருப்பிடச் சான்று அளித்து மாணவர் சேர்க்கை பெற்றது போல, வேறு வகையில் மோசடியாக மாணவர் சேர்க்கை பெற்றுள்ளனரா என கண்டறியப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பப் பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அரசு வழக்கறிஞர் ஆஜராகி அரசு மருத்துவ கல்லூரிகளைச் சேர்ந்த 2 மாணவர்களும், நிகர்நிலை பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 3 பேரும், இடைத்தரகராக செயல்பட்ட ஒருவரும் சிபிசிஐடி விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அரசின் இந்த பதிலால் அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள், நாடு முழுவதும் 14 லட்சம் பேர் நீட் தேர்வெழுதிய நிலையில் ஒரு இடைத்தரகர் மட்டும் தான் சிக்கியுள்ளாரா? என கேள்வி எழுப்பினர். மேலும், அரசு அலுவலர்களின் துணையில்லாமல் இந்த முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பில்லை என தெரிவித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்டவர்களை கண்டறிவதில் அரசு விழிப்புடனும், கவனத்துடனும் இருக்க வேண்டுமென அறிவுறுத்தினர். பின்னர் இந்த வழக்கில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை, தமிழ்நாடு சுகாதாரத் துறை, தமிழ்நாடு டிஜிபி, தமிழ்நாடு சிபிசிஐடி ஆகியோரை தாமாக முன்வந்து இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாக சேர்த்து உத்தரவிட்டனர்.
மேலும், எத்தனை மாணவர்கள் நீட் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், எவ்வளவு தொகை பரிமாற்றம் நடந்துள்ளது, எந்தெந்த அரசு அலுவலர்கள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்ற விவரங்களை சிபிசிஐடி அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை அக்டோபர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.
இதையும் படிங்க: நீட் ஆள்மாறாட்டம் வழக்கு: தரகர்களின் பெயர்கள் வெளியீடு