சென்னை: நீட் மதிப்பெண் பட்டியலில் முறைகேடு செய்து மருத்துவக் கலந்தாய்வில் கலந்து கொண்ட ராமநாதபுரத்தைச் சேர்ந்த மாணவி தீக்ஷா, அவருடைய தந்தை பாலசந்திரன் ஆகிய இருவர் மீதும் பெரியமேடு காவல் நிலையத்தில் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த மோசடி விவகாரம் தொடர்பாக இருவரும் இன்று பெரியமேடு காவல் நிலையத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு பெரியமேடு காவல்துறையினர் சம்மன் அனுப்பியிருந்தனர்.
ஆனால், மாணவி தீக்ஷா, அவருடைய தந்தை பாலசந்திரன் ஆகிய இருவருமே பெரியமேடு காவல் நிலையத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை. மேலும், மாணவி தரப்பிலிருந்து தொலைபேசி மூலமாகவோ, அவரது வழக்கறிஞர் மூலமாகவோ எந்தத் தகவலும் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்படவில்லை என பெரியமேடு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வழக்கமாக காவல்துறையினர் அனுப்பிய சம்மனுக்கு குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராகவில்லை என்றால் இரண்டாவது அல்லது மூன்றாவது முறை மீண்டும் சம்மன் அனுப்பப்படும். அப்போதும், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராகவில்லை என்றால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆனால் இந்த நீட் மதிப்பெண் மோசடி என்பது முக்கியமான வழக்கு என்பதால் இதில் அடுத்தக்கட்டமாக இருவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என பெரியமேடு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: நாமக்கல் மாணவி நீட் தேர்வில் முறைகேடு!