கேரள மாநிலம், திருவனந்தபுரம், வழுதக்காட்டில் இன்று (அக்.1) நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு “கூட்டாட்சி மற்றும் மத்திய-மாநில உறவுகள்” (Federalism and Centre-State Relations) குறித்த கருத்தரங்கில் உரையாற்றினார். அப்போது பேசிய ஸ்டாலின், திராவிட இயக்கத்துக்கும் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்குமான நட்பு என்பது இரண்டு இயக்கங்களும் தோன்றிய காலத்திலேயே உருவான நட்பு.
இந்தியா விடுதலை அடைந்தபோது, கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட அந்த காலக்கட்டத்தில், திராவிட இயக்கத்தின் தலைவர்கள் வீட்டில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் தலைமறைவாக இருந்தார்கள். 1967ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த ஆட்சி மாற்றத்தின்போது திமுக உடன் இருந்த கட்சிதான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. திராவிட இயக்கம் உருவாகவில்லை என்று சொன்னால், நான் கம்யூனிஸ்ட் இயக்கத்தில்தான் இருந்திருப்பேன் என்று சொன்னவர் கலைஞர். அது மனப்பூர்வமாகச் சொன்னது என்பதன் அடையாளம்தான் எனக்கு ஸ்டாலின் என்று பெயர் சூட்டியது. நாம் வெவ்வேறு இயக்கமாக இருந்தாலும், எங்கள் கட்சிக் கொடியில் பாதி சிவப்பு நிறம் இருக்கிறது. நாம் ஒரே கொள்கைக்காரர்கள் என்பதால்தான், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, அகில இந்திய அளவிலும் கூட்டணியைத் தொடர்ந்து கொண்டு இருக்கிறோம்.
இது கேரளாவில் நடக்கக்கூடிய மாநாடாக இருந்தாலும், இந்தியா முழுமைக்கும் கூட்டாட்சி உருவாக வேண்டும் என்பதும், மாநிலத்தில் சுயாட்சி மலர வேண்டும் என்பதும், இந்தியா முழுமைக்குமான கருத்தியல். நான் தமிழ்நாட்டைக் காக்கவும், தோழர் பினராயி விஜயன் கேரளத்தைக் காக்கவும் மட்டும் கூட்டாட்சி என்ற முழக்கத்தை முன்னெடுக்கவில்லை. இந்தியாவை முழுவதுமாக காக்க வேண்டுமானால், முதலில் மாநிலங்களை நாம் காக்க வேண்டும். மாநிலங்களின் ஒன்றியம்தான் இந்தியா. அதனால் இந்த மாநாட்டையே நடத்துகிறீர்கள். நான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கிறேன், பினராயி விஜயன் கேரளத்தில் முதலமைச்சராக இருக்கிறார். அதனால் நமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று நினைக்க முடியாது.
இந்தியா முழுமைக்கும், கூட்டாட்சியை, மாநில சுயாட்சியை, மதச்சார்பின்மையை, சமத்துவத்தை, சகோதரத்துவத்தை, சமதர்மத்தை, சமூகநீதியை நிலைநாட்ட நாம் குரல் கொடுத்தாக வேண்டும். இங்கொன்றும் அங்கொன்றுமாக தனித்தனிக் குரலாக ஒலிப்பதால் பெரிய பயனில்லை. ஒரே குரலாக ஒலிக்க வேண்டும். அத்தகைய ஒற்றுமை ஓரிரு மாநிலங்களில் மட்டும் உருவானால் போதாது. அனைத்து மாநிலங்களிலும் உருவாக வேண்டும். அனைத்திந்திய சக்தியாக நாம் உருவெடுக்க வேண்டும்.
அரசினுடைய 'இறையாண்மை' (Sovereignty) என்பதற்கு நாம் மேற்கொள்ளும் பொருள் என்ன? அரசியல் இறையாண்மையானது பொதுமக்களிடம் நிலைத்துள்ளதென நமது அரசியலமைப்பின் முகவுரை கூறுகிறது. சட்டம் சார்ந்த இறையாண்மையானது கூட்டாட்சி ஒன்றியத்திற்கும் மாநிலங்களுக்கும் இடையே பிரித்துத் தரப்பட்டுள்ளது. இன்னும் அதிகப் பயன்களை விளைவிக்கும் இறையாண்மையைப் பெற்ற அங்கங்களாக, மாநிலங்களைத் திகழச் செய்வதற்கே எங்கள் திட்டங்கள் பயன்படுகின்றன என்று நீங்கள் ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது..? நாம் ஒரு கூட்டாட்சி அமைப்பை ஏற்றிருக்கிறோம்.
அரசமைப்பை உருவாக்கியவர்கள், ஒற்றையாட்சி அமைப்பு கூடாது; கூட்டாட்சி அமைப்பு முறைதான் வேண்டுமென்று விரும்பினார்கள். ஏனெனில், அரசியல் தத்துவ ஞானிகள் பலர் சுட்டிக்காட்டி உள்ளபடி, இந்தியா மிகப் பரந்தது. உண்மையில் அதனை ஒரு துணைக்கண்டம் என அழைக்கக் கூடிய அளவிற்கு அது பரந்து விரிந்து கிடக்கின்றது. சென்ற பதிமூன்றாண்டு காலமாக நமது கூட்டாட்சி செயல்படும் தன்மையானது மாநிலங்களிடையே விரக்தி உணர்ச்சியைத் தோற்றுவித்துள்ளது என்பதே எனது குற்றச்சாட்டு.
மாநிலங்கள், சாதாரண நகராட்சி மன்றங்களைப்போல் விரைந்து மாறி வருகின்றன. அவை, இருக்கும் இடம் தெரியாமல் பின்னணிக்குத் தள்ளப்பட்டுள்ளன. அதிக அதிகாரங்கள் தரப்பட வேண்டுமென்ற இயற்கையான உணர்வுகள் மாநிலங்களிடம் தோன்றியுள்ளன. நமது அரசியல் சட்டம் மறு பரிசீலனை செய்யப்படவேண்டும். மறு ஆய்வும் செய்யப்பட வேண்டும்.
இதனை ஒன்றிய அரசு உணர வேண்டும் என்பதே மாநிலங்களின் கோரிக்கை! எனவே நமது அரசமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சி முறையிலுள்ள பல ஒற்றைத் தன்மைகளை எதிர்த்துப் போரிடுகின்ற ஒரு தாக்குதல் முன்னணியாகவே (Spear-head) நீங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கருதிக் கொள்ள வேண்டுகிறேன்'' என்று அண்ணா 1963ஆம் ஆண்டு மாநிலங்களவையில் பேசி இருக்கிறார்கள். 60 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அவர் எடுத்துக்கூறிய நிலைமை இன்னும் மாறவில்லை. மேலும் மோசமாகத்தான் போய்க் கொண்டு இருக்கிறது.
Union List (ஒன்றியப் பட்டியல்) - State List (மாநிலப் பட்டியல்) - Concurrent List (ஒத்திசைவுப் பட்டியல்) என்று வைத்திருக்கிறார்களே தவிர, எல்லாவற்றையும் Union List ஆகவே நினைக்கிறார்கள். Concurrent List என்பது முழுக்க, முழுக்க Union List ஆக மாறிக் கொண்டு இருக்கிறது. மாநில அதிகாரங்களையும், மடைமாற்றம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
GST மூலமாக நிதி உரிமை பறிக்கப்பட்டு விட்டது. இதனை நிதி உரிமைப் பறிப்பாக மட்டும் நான் கருதவில்லை. நிதி உரிமையைப் பறிப்பதன் மூலமாக மாநிலங்களின் வளர்ச்சியைத் தடுப்பதாகும். அதனால்தான் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம். நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளால் கல்வி உரிமை மறுக்கப்படுகிறது. ஏழை எளிய மனிதர்களின் வீட்டுப் பிள்ளைகள் மருத்துவம் படிக்க முடியாமல் தடுக்கப்படுகிறார்கள் என்பதற்காக மட்டுமே அதனை எதிர்க்கவில்லை. இதன் மூலமாக மாநில அரசு நினைக்கும் கல்வி முறையை நடைமுறைப்படுத்த முடியாமல் தடுக்கிறார்கள் என்பதற்காகவும் எதிர்க்கிறோம். கல்வி கற்றால் தன்னாலே தகுதி வந்துவிடும். தகுதி இருந்தால்தான் நீ படிக்கவே வரலாம் என்று கூறுவது ஏமாற்று வேலை. பழமைவாதக் கருத்துகளுக்கு முலாம் பூசும் வேலை.
தேசிய கல்விக் கொள்கை என்பது கல்வியைப் பல்வேறு படிநிலைகளில் தடுப்பு போட்டு மறிக்கும் கொள்கையாக உள்ளது. அதனை காவிக் கொள்கையாக, இந்தி மொழியைத் திணிக்கும் கொள்கையாக, வடிவமைக்கிறார்கள் என்பதற்காக மட்டும் எதிர்க்கவில்லை. மாநில அரசாங்கம், தனது சிந்தனை வகைப்பட்ட கல்வியைத் தருவதைத் தடுக்கிறார்கள் என்பதற்காகவும் எதிர்க்கிறோம். நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் ஒடுக்கப்பட்டவர்களுக்குக் கல்வியை மறுக்கின்றன.
மூன்று வேளாண்மைச் சட்டங்கள், மாநிலங்களின் அதிகாரத்தில் இருக்கும் வேளாண்மைத் துறையில் தலையிடுவதாக இருந்தது. சுற்றுச்சூழல், தொழிலாளர் நலன், துறைமுகங்கள் இப்படி பல்வேறு சட்டங்கள் பா.ஜ.க. அரசால் கொண்டு வரப்படுகின்றன. இவை மக்கள் விரோத சட்டங்களாகவும், மாநில அளவில் இருக்கக்கூடிய ஒரு விரோதத்திற்குரிய சட்டங்களாகவும் இருக்கின்றன. அதனால்தான் அவற்றை உறுதியாக எதிர்த்து வெற்றி பெற்றோம்! எதேச்சாதிகாரம் எப்போதும் வெல்ல முடியாது என டெல்லியில் நடைபெற்ற உழவர்களின் போராட்டம் நிரூபித்துள்ளது.
நேரடியாகச் செய்ய முடியாத அரசியல் தலையீடுகளை சட்டத்தின் போர்வையில் செய்யப் பார்க்கிறார்கள். கவர்னர்களின் மூலமாக இரட்டை ஆட்சி நடத்தப் பார்க்கிறது பாஜக தலைமை. நமது எண்ணங்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமாக எழுப்பினால் அதற்கு உரிய பதில் கூட நாடாளுமன்றங்களில் சொல்லப்படுவது இல்லை. நமக்கான உரிமையை நிலைநாட்ட கடிதம் அனுப்பினால் அதற்கான பதில் கூட ஒன்றிய அரசிடம் இருந்து நமக்கு வருவது இல்லை.
வெறும் கையை பிசைந்து கொண்டு மாநிலங்கள் நிற்கிறது. இவைகளைத் தடுக்க நாம் முழக்கமிடுவது என்பது அரசியல் முழக்கம் மட்டுமல்ல, மாநிலங்களைக் காப்பாற்ற வேண்டிய முழக்கமாகவும் அமைந்துள்ளது. திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் மாநிலங்களுக்காக மட்டுமல்ல பாஜக ஆளும் மாநிலங்களுக்கும் சேர்த்துத்தான் நாம் குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம். அவையும் நெருக்கடியில் உள்ளன.
One Nation (ஒரே நாடு)
One Election (ஒரே தேர்தல்)
One Food (ஒரே உணவு)
One Exam (ஒரே தேர்வு)
One Religion (ஒரே மதம்)
One Language (ஒரே மொழி)
One Culture (ஒரே கலாசாரம்)
இப்படி எல்லாவற்றையும் ஒரே - ஒரே - ஒரே என்று கோரஸ் பாடுகிறார்கள். இப்படியே போனால் ஒரே கட்சி என்று ஆகிவிடும். ஒரே கட்சியானால், ஒரே ஆள் என்று ஆகிவிடும். இதை விட ஆபத்து வேறு எதுவுமே இருக்க முடியாது. ஒரே கட்சி என்று ஆகும் வரை பாஜகவினர் மகிழ்ச்சி அடையலாம். ஒரே ஆள் என்று ஆகும்போது நம்மோடு சேர்ந்து பாஜகவினரும் எதிர்க்கத்தான் வேண்டும். இத்தகைய எதேச்சாதிகாரத்துக்கு எதிரான குரல்தான் ‘மாநிலத்தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி' என்பது இந்தியா என்பது ஒற்றை அரசு அல்ல, பல்வேறு மாநில அரசுகளின் ஒன்றியம்தான் இந்திய அரசு. ஒன்றியம் - யூனியன் என்பது தவறான சொல் அல்ல, அரசியலமைப்புச் சட்டம் வரையறுக்கும் சொல்தான் யூனியன்.
இந்திய ஒன்றியத்துக்குள் உள்ளடங்கிய அனைத்து மாநிலங்களையும் காப்பாற்ற வேண்டும். மாநிலங்களைக் காப்பாற்றுவது என்பது மாநில மொழியைக் காப்பாற்றுவது. மாநிலத்தில் அதிக எண்ணிக்கையில் வாழும் தேசிய இனங்களைக் காப்பாற்றுவது! மாநிலங்களின் பண்பாட்டைக் காப்பாற்றுவது! அந்த மாநில மக்களின் உரிமைகளைக் காப்பாற்றுவது! மாநிலங்கள் காப்பாற்றப்பட்டால்தான் இந்தியா காப்பாற்றப்படும்.
Uniformity is not Unity - ஒரே தன்மை என்பது ஒற்றுமை ஆகாது. இந்தியா விடுதலை அடையும்போது, இந்தியாவானது ஓராண்டு கூட ஒற்றுமையாக இருக்காது என்று சொல்லப்பட்டது. ஏனென்றால் பல்வேறு இனம், மொழி, மதம், பண்பாடு சார்ந்த மக்கள் வாழும் நாட்டை ஒற்றுமையாக இவர்களால் காப்பாற்ற முடியாது என்று சொல்லப்பட்டது. 75 ஆண்டுகளைக் கடந்தும் ஒற்றுமையுடன் ஒன்றுபட்ட இந்தியாவாக இருக்கிறது என்றால் இந்த வேற்றுமைகளை உள்ளத்தில் தாங்கி ஒற்றுமையாக இருப்பதால்தான். இந்தியாவை ஒற்றுமைப்படுத்தும் மந்திரச் சொற்கள்தான் கூட்டாட்சி – மாநில சுயாட்சி ஆகியவை. இவை இரண்டுக்கும் குந்தகம் ஏற்படுத்துபவர்களை இந்தியாவின் எதிரிகள் என்றுதான் சொல்ல வேண்டும்.
தனது நலனுக்காக மக்களைப் பிரிக்கப் பிறந்ததுதான் பாஜக. இது பல நேரங்களில் இந்திய அரசியலில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. வருங்காலத்திலும் தோற்கடிக்கப்படும். அரசியல் ரீதியாக அடைந்த தேர்தல் வெற்றிகளை தனது கருத்தியலுக்குக் கிடைத்த வெற்றியாக பாஜக நினைத்துக் கொள்ளக் கூடாது என்பதை பணிவன்புடன் நினைவுறுத்த விரும்புகிறேன். அத்தகைய மதவாத - வகுப்புவாத - சாதியவாத - எதேச்சதிகார - ஒற்றைத்தன்மை கொண்ட இந்தியாவை பாஜக-வால் உருவாக்க முடியாது. அதனை இந்திய மக்கள் அனைவரும் எதிர்ப்பார்கள்.
தமிழ்நாடு - கேரளா மட்டுமல்ல அனைத்து மாநிலங்களும் எதிர்க்கும் காலம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. தென்னகத்தில், திருவனந்தபுரத்தில் ஒலிக்கும் இந்த ஒற்றுமைக் குரல் - இந்தியா முழுமைக்கும் எதிரொலிக்கும் காலம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. அந்தக் காலம் இந்தியா முழுமைக்குமான கூட்டாட்சியை உருவாக்கும் காலமாக அது அமையும். அனைத்து மாநிலங்களுக்குமான விடிவுகாலமாக அது அமையும்! அதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த மாநாடு அடித்தளம் அமைத்துள்ளது. இந்த ஒற்றுமை எல்லா மாநிலங்களிலும் உருவாக, எல்லாக் கட்சிகளும் செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: அண்ணாமலை அமெரிக்கா பயணம்..! காரணம் என்ன..?