இந்தியாவில் ஒடிசா மாநிலம் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் நீட் நுழைவுத்தேர்வு இன்று நடைபெற்றுவருகிறது. இந்தத் தேர்வினை எழுதுவதற்கு அமைக்கப்பட்டுள்ள மையங்களுக்கு மாணவர்கள் மதியம் 12.30 மணி முதல் அனுமதிக்கப்பட்டனர். அப்போது மாணவர்களுக்கு ஏற்கனவே அறிவித்தபடி ஆடைக் கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டன.
இந்நிலையில், தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள 36 மையங்களில் ஒன்பதாயிரத்து 796 மாணவர்களும், 16 ஆயிரத்து 739 மாணவிகளும் தற்போது நீட் நுழைவுத்தேர்வு எழுதி வருகின்றனர்.
அதேபோல், கோவை, கடலூர், காஞ்சிபுரம், கரூர், மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 118 மையங்களில் 53 ஆயிரத்து 470 மாணவர்களும், 81 ஆயிரத்து 241 மாணவிகளும் தேர்வு எழுதி வருகின்றனர்.
மதியம் இரண்டு மணிக்கு தொடங்கியுள்ள நீட் நுழைவுத் தேர்வு இன்று மாலை 5 மணியுடன் நிறைவுபெறும். இதில் 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி வெளியிட தேசிய தேர்வு முகமை திட்டமிட்டுள்ளது.