சென்னை: மக்கள் நல்வாழ்விற்கான மருத்துவர் அரங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ். காசி நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட நீதியரசர் ஏ.கே. ராஜன் உயர்நிலைக் குழுவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
•"2007 முதல் 2016 வரை, ஒன்பது ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நுழைவுத்தேர்வு இல்லாமல் 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயின்ற மருத்துவ மாணவர்கள் (85%), அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு எழுதி இடம்பிடித்த மாணவர்களுக்கு (15%) இணையாக கல்வித்தரத்தில் சிறந்து விளங்கினர் என்பது மறுக்க முடியாத உண்மை. அவர்கள் பட்டமேற்படிப்பு நுழைவுத் தேர்வுகளில் அதிக இடங்களைப் பெறுவதிலிருந்து இதை உறுதி செய்துகொள்ளலாம்.
• தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளை உருவாக்குவதிலும் நிர்வகிப்பதிலும் - உயர்நிலை, மேல்நிலைப் பாடத்திட்டம், மருத்துவக் கல்விப் பாடத்திட்டத்தை உருவாக்குவதிலும் மாநில அரசின் உரிமைகளை 'நீட்' தேர்வு பாதித்துள்ளது.
ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் மருத்துவத் துறை
• 'ஆயுஷ்' மற்றும் செவிலியர் படிப்புகளுக்கும் 'நீட்' தேர்வை நடைமுறைப்படுத்துவதன் மூலம், ஒட்டுமொத்த மருத்துவம், மருத்துவம் சார்ந்த துறைகளையும் ஒன்றிய அரசு தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் திட்டம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதன்மூலம் 'கார்ப்பரேட்' மருத்துவமனைகளுக்குத் தேவையான மருத்துவர்கள், செவிலியர் ஆகியோரைத் தயார்செய்யும் அதே வேளையில், பொது சுகாதார மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகளைச் சீரழிக்கும்.
மாநில அரசின் உரிமைகளை 'நீட்' தேர்வு பாதித்துள்ளது • நாடு முழுவதும் ஒரே மாதிரியான கற்றல் சூழலும், பாடத்திட்டமும் இல்லாதபோது, ஒரே மாதிரியான தேர்வை ஏற்றுக்கொள்ள முடியாது. நீட் 'தேர்வின் மூலம் தகுதியான மாணவர்கள் மட்டுமே எம்பிபிஎஸ் படிப்பார்கள் என்று சொல்லப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக நீட் தேர்வு அடிப்படையில் நடத்தப்பட்ட சேர்க்கையின் புள்ளி விவரங்கள் அதைத்தவறு என்று நிரூபித்துள்ளன.• 2016ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கை 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடத்தப்பட்டது. (85% இடங்கள்) மருத்துவப் படிப்பில் சேர உயிரியல், இயற்பியல், வேதியியல் பாடங்களில் 50 விழுக்காட்டிற்கு குறைவாக எடுத்த மாணவர்கள் எம்பிபிஎஸ் சேர முடியாது. மேலும் 2016 வரை 12ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளில் இடம்பெற்றவர்களின் குறைந்தபட்ச மதிப்பெண்கள் சராசரியாக 200-க்கு 180-க்கு மேல் இருந்திருக்கிறது. எனவே குறிப்பிட்ட மூன்று பாடங்களிலும் (இயற்பியல், வேதியியல், உயிரியல்) 180 மதிப்பெண்களுக்கு மேல் (அதாவது 90%) எடுப்பவர்கள் மட்டுமே மருத்துவக் கல்லூரியில் இடம்பெற்றனர்.
• ஆனால் 'நீட் தேர்வில் 'Precentile முறையில் குறைந்தபட்சம் 40 முதல் 50 Precentile மதிப்பெண் எடுப்பவர்கள்கூட எம்பிபிஎஸ் சேர முடியும். இதனால் பணம் இருந்தால் நீட் தேர்வில் 16 முதல் 25 விழுக்காடு மதிப்பெண் பெற்றவர்கள்கூட தனியார் நிர்வாக ஒதுக்கீடு இடங்களில் சேர முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
அதே நேரத்தில் 40 விழுக்காடு அல்லது 50 விழுக்காடு மதிப்பெண் பெறும் ஏழை மாணவன், தனியார் மருத்துவக் கல்லூரியில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டிற்கு கேட்கப்படும் கட்டணத்தைச் செலுத்த முடியவில்லையென்றால் எம்பிபிஎஸ் சேர முடியாது. (தனியார் கல்லூரியில் அரசு ஒதுக்கீடு இடங்கள்: ரூ.10-15 லட்சம் வரை, நிர்வாக இடங்கள் ரூ.20-25 லட்சம்) இதைப் புரிந்துகொள்ள நீட் தேர்வு நடத்தப்படும்விதம் குறித்து விளங்கிக் கொள்ள வேண்டும்.
• நீட் தேர்வில் மொத்தம் 720 மதிப்பெண்கள் (180 கேள்விகள் - ஒவ்வொரு சரியான விடைக்கும் நான்கு மதிப்பெண்கள்; தவறான விடைக்கு 1 மதிப்பெண் கழியும்) உயிரியல் பாடம் 360 மதிப்பெண்கள், இயற்பியல் 180 மதிப்பெண்கள், வேதியியல் 180 மதிப்பெண்கள் கடந்த 2018இல் கட் ஆஃப் (ஒசி) 119ஆக இருந்தது. 720-க்கு 119 என்பது வெறும் 16.53 விழுக்காடுதான். எனவே 'மெரிட்' என்ற வாதம் முற்றிலும் அடிபட்டுப்போகிறது.
பூஜியம் மதிப்பெண் பெற்றாலும் மருத்துவம் படிக்கலாம்
• மருத்துவம் பயில தேவையான மூன்று பாடப்பிரிவுகளில், ஒன்று அல்லது இரண்டு பாடப்பிரிவுகளில் '0' மதிப்பெண் பெறுபவர்கூட நீட் தேர்வு முறையில், எம்பிபிஎஸ் படிப்பில் சேருவதற்குத் தகுதிபெற முடியும். உதாரணமாக உயிரியல் பாடத்தில் '0' மதிப்பெண் வாங்கிய ஒரு மாணவன் இயற்பியல், வேதியியல் பாடங்கள் சேர்த்து 119-க்கு (2018-00-கட் ஆஃப்) மேல் வாங்கினால், ஒரு மருத்துவச்சீட்டை விலைக்கு வாங்க முடியும். அதுபோல, இயற்பியல் அல்லது வேதியியல் பாடத்தில் '0' மதிப்பெண் பெற்றவர்கூட மருத்துவம் படிக்க முடியும்.
மாநில அரசின் உரிமைகளை 'நீட்' தேர்வு பாதித்துள்ளது மருத்துவ இடங்கள் வணிகமயம் • 'தகுதியுள்ள மாணவர்களுக்கு பண வசதி இல்லை என்றாலும்கூட மருத்துவ சீட் கிடைக்க வேண்டும். வணிகமயமாக்கப்பட்ட மருத்துவக் கல்வி சூழலில் இத்தகைய மாணவர்களுக்கு இடம் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்' என்று எந்த நோக்கத்திற்காக ரஞ்சித் ராய் சௌத்திரி குழுவும், நாடாளுமன்ற நிலைக்குழுவும், உச்ச நீதிமன்றமும் நுழைவுத் தேர்வை தனியார், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் எம்பிபிஎஸ் சேர்க்கைக்கு வலியுறுத்தினார்களோ, அது நிறைவேறவில்லை. மாறாக நீட் தேர்வின் மூலம் மருத்துவச் சீட்டுகள் வணிகமயமாவது (கேபிடேசன்) சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது.
• 'நீட் தேர்வில் தகுதிபெற்றாலே (கட் ஆஃப் மார்க் வாங்கினாலே) 'தேர்ச்சி' என்று கூறுவதன் மூலம் மருத்துவக் கல்லூரியில் நிச்சயம் இடம் கிடைக்கும் என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். இதனால் கிராமப்புற, ஏழை எளிய, நடுத்தர வர்க்க மாணவர்கள் கட் ஆஃப் மார்க்கிற்கு மேல் நல்ல மதிப்பெண் பெற்றாலும், 'அரசு மருத்துவக்கல்லூரிகளில் ஒதுக்கீடு' கிடைக்காதபோது தனியார் கட்டணக் கொள்ளைக்கு ஈடுகொடுக்க முடியாமல் போகிறது.
இத்தகைய மன அழுத்தமும், மன உளைச்சலும்தான் 'நீட்' தொடர்பான தற்கொலைகளுக்கு அடிப்படை காரணமாக அமைகிறது.
தனியாருக்கு செல்லும் அரசு மருத்துவமனைகள்?
• தமிழ்நாட்டில் தற்போது 25 அரசு மருத்துவக் கல்லூரிகளும் அதற்கு இணையான எண்ணிக்கையில் தனியார் மருத்துவக்கல்லூரிகளும் இயங்கிவருகின்றன. மேலும் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் ஓரிரு ஆண்டுகளில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிடும். கடந்த ஐந்து ஆண்டுகளில் 'நீட் தேர்வு முறையில்' முதுகலை படிப்பு, உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் ஒதுக்கப்பட்டதன் விளைவாக மருத்துவ ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இது, அரசு மருத்துவக்கல்லூரி,மருத்துவமனைகளில் சுகாதாரப் பணிகளைப் பெருமளவு பாதிக்கும். நாளடைவில் போதிய மருத்துவர்கள் இல்லை என்ற காரணம் கூறி, அரசு மற்றும் பொது சுகாதாரக் கட்டமைப்புகளும் தனியாருக்குத் தாரைவார்க்கப்படும். 'நீட்' தேர்வுகளின் அடிப்படை நோக்கமே பொது சுகாதாரக் கட்டமைப்பை தகர்த்து தனியார்மயத்தை புகுத்துவதுதான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
நீட் தேர்வு கிராமபபுற மாணவர்களுக்கு எதிரானது
• நீட் கோச்சிங் ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனி: நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தபின் தனியார் 'கோச்சிங்' நிறுவனங்கள் புற்றீசல்போல் தோன்றின. பல லட்சங்களைச் செலவுசெய்து பயிற்சி எடுத்தால் மட்டுமே 'நீட்' தேர்வில் நல்ல மதிபெண்கள் கிடைக்கும் என்ற நிலையில், ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் தன் 'பிள்ளைகள்' மீது, முதலீடு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
முதல் முறை தேர்வு பெறவில்லையென்றால், அடுத்தடுத்த ஆண்டுகளில் மீண்டும் முயற்சி செய்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் 10 முதல் 20 விழுக்காடு மாணவர்கள் 'மீண்டும்' எழுதித் தேர்ச்சிப் பெற்றவர்கள். எனவே, நீட் கோச்சிங்கிற்கு 11இல் தொடங்கி, மொத்தம் 2 முதல் 5 ஆண்டுகளுக்கு பல லட்சம் செலவு செய்ய வேண்டியுள்ளது.
இத்தகைய 'நிதி' ஆதாரங்கள் சாதாரண, கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு கிடைப்பதற்கு வாய்ப்பில்லை என்பதால், அத்தகைய மாணவர்களின் 'மருத்துவக் கனவு' வெறும் கனவாகவே கடந்துபோகிறது. இவ்வாறு நீட் தேர்வு, கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு எதிராக இருக்கிறது.
எனவே, அரசியல் சட்டத்திற்கு எதிரான, மாநில உரிமைகளுக்கு எதிரான, சமூக நீதிக்கு எதிரான, கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு எதிரான, பொது சுகாதாரச் சேவைகளுக்கு எதிரான மொத்தத்தில் தமிழ்நாட்டிற்கு எதிரான நீட் தேர்வை முற்றிலும் நிராகரிக்க வேண்டும். 12ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும்" என மக்கள் நல்வாழ்விற்கான மருத்துவர் அரங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ். காசி மனுவில் கூறியுள்ளார்.