நாடு முழுவதும் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு இன்று (செப்.13) நடைபெறுகிறது. மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை இந்தத் தேர்வு நடைபெறவுள்ளது. நீட் தேர்வு எழுதுவதற்கு நாடு முழுவதும் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். இவர்களுக்காக 3,842 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதில் தமிழ்நாட்டில் 14 நகரங்களில் 242 தேர்வு மையங்களில் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 990 மாணவர்கள் தேர்வு எழுத விண்ணப்பத்துள்ளனர். தேர்வு மையங்களுக்கு 11:40 முதல் மாணவர்கள் கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தனர்.
தொடர்ந்து, அவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, சானிட்டைசர்கள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு மாணவர்கள் ஏற்கனவே ஹால் டிக்கெட்டில் இருந்த விதிமுறைகளை பின்பற்றிப் ஆடைக் கட்டுப்பாடு, தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்து வராமல் இருந்தனர். மாணவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் காவல் துறை மூலம் செய்யப்பட்டுள்ளது.
நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களின் பெற்றோர் இது குறித்து கூறும்போது, ”நீட் தேர்வு எழுதுவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் சிபிஎஸ்இ பள்ளிகள் மிகக் குறைவாகவே உள்ளன. உச்ச நீதிமன்றம் காவிரி உள்ளிட்ட நதிநீர் பிரச்சினைக்கு மாநில பிரச்சனைகளை மாநிலத்திற்குள் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள் என அறிவுரை கூறுகிறது. அதேபோல் நீட் தேர்விலும் மாநிலத்தில் படிக்கும் மாணவர்களுக்கு அந்தப் பாடத்திட்டத்தில் இருந்தும், சிபிஎஸ்சி மாணவர்களுக்கு அந்தப் பாடத்திட்டத்திலிருந்தும் கேள்வித்தாள்கள் வழங்க வழிசெய்ய வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: நீட் தேர்வு வழிகாட்டுதல்களில் தமிழ் மொழி புறக்கணிப்பு!