தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்று காரணமாக மார்ச் 25ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டன. அதனைத் தொடர்ந்து 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால், 10ஆம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான தேர்வு செப்டம்பர் மாதம் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்பட்டது.
மேலும், தமிழ்நாட்டில் நவம்பர் 16ஆம் தேதி முதல் 9, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகளை திறக்கலாம் என முதலமைச்சர் அறிவித்தார். ஆனால், இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின.
அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி அந்தந்த அரசுப் பள்ளிகள், அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர், பெற்றோர்-ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடமும், தனியார் பள்ளிகளின் நிர்வாகத்துடனும் பள்ளிகள் திறப்பது குறித்து நவம்பர் 9ஆம் தேதி கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.
இந்த கருத்துக் கேட்புக் கூட்டம், அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களின் தலைமையில் காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி பெற்றோர் பள்ளிக்குள் நுழைவதற்கு முன்னர் தெர்மல் ஸ்கேன் செய்யப்பட வேண்டும் எனவும், கைகளை கழுவதற்கு ஏற்பாடு செய்வதுடன், கிருமி நாசினி கொண்டும் கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவுரை வழங்கி உள்ளது. மேலும் மாணவர்கள் அதிகமாக இருந்தால் அந்தப் பள்ளியில் பெற்றோரை வகுப்பறையில் பிரித்து அமர வைத்து கருத்துக் கேட்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.