சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று (மார்ச் 12) தேசிய லோக் அதாலத் நடத்தப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நான்கு அமர்வுகளும், மதுரைக் கிளையில் நான்கு அமர்வுகளும், மாவட்ட மற்றும் தாலுகா அளவுகளில் என மாநிலம் முழுவதும் மொத்தம் 419 அமர்வுகளும் வழக்குகளை தீர்வுக்கு எடுத்துக் கொண்டன.
இதில், 334 கோடியே 91 லட்சத்து 11 ஆயிரத்து 545 ரூபாய் மதிப்பிலான 79 ஆயிரத்து 599 வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளன. இதில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 63 ஆயிரத்து 348 வழக்குகளும், நீதிமன்ற விசாரணைக்கு வராத 12 ஆயிரத்து 251 வழக்குகளும் அடங்கும்.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலாளர் ராஜசேகர் வெளியிட்ட அறிவிப்பில், " 2004 செக் மோசடி வழக்குகளில் இரு தரப்பினருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, 49 கோடியே 97 லட்சத்து 23 ஆயிரத்து 381 ரூபாய் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 3 ஆயிரத்து 157 மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் 144 கோடியே 85 லட்சத்து 25 ஆயிரத்து 246 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. 7 ஆயிரத்து 301 சிவில் வழக்குகளில் 33 கோடியே 60 லட்சத்து 32 ஆயிரத்து 130 ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 106 குடும்ப நல வழக்குகள் இந்த லோக் அதாலத்தில் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், தொழிலாளர் பிரச்னை தொடர்பான 20 வழக்குகளில் 71 லட்சத்து 50 ஆயிரத்து 900 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி 8.10 விழுக்காடாக குறைப்பு