சென்னை: சமீபத்தில் விழுப்புரம் மாவட்டம் எக்கியார் குப்பம், செங்கல்பட்டு மாவட்டம் பெருக்கரணை, பேரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர்களில் பலரும் கள்ளச்சாராயம் குடித்த நிலையில், இதில் 50-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து இரண்டு நாட்களுக்குள் விழுப்புரம் மாவட்டத்தில் 14 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 பேரும் என இதுவரையில் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, நடத்திய தேடுதல் வேட்டையில் 1,842 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,558 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்து உள்ளது. இதில் 19 புள்ளி 28 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் 4 புள்ளி 943 லிட்டர் சாராய ஊரல்கள் அழிக்கப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.
கள்ளச்சாராயம் அருந்தி பலர் உயிரிழந்த விவகாரத்தில், செங்கல்பட்டு மாவட்ட எஸ்பியாக இருந்த பிரதீப் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அத்தோடு, மாவட்ட கலால் துணை கண்காணிப்பாளர் துரை பாண்டியன் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களை விழுப்புரத்திற்கு நேரில் சென்று முதலமைச்சர் ஸ்டாலின் நலம் விசாரித்தார். இதற்கிடையே, தொழிற்சாலையில் இருந்து திருடி விற்கப்பட்ட மெத்தனால் எனப்படும் விஷச்சாராயம் தான் உயிரிழப்புக்கு காரணம் என, தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கெட்டது சட்டம் ஒழுங்கு! மு.க. ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் - ஈபிஎஸ் குற்றச்சாட்டு!
இவ்வாறு விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தியதாகக் கூறப்படும் பலர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் வெளியான செய்திகளை அடுத்து தேசிய மனித உரிமைகள் ஆணையம், தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
ஊடக அறிக்கைகளின் உள்ளடக்கம் உண்மையாக இருந்தால், மக்களின் வாழ்வுரிமையை மீறப்படுவதாக ஆணையம் தெரிவித்துள்ளது. மாநில அரசு சட்ட விரோதமான, போலி மதுபானம் விற்பனை மற்றும் நுகர்வு ஆகியவற்றைத் தடை செய்ய அதன் கடமையில் இருந்து தவறிவிட்டது என்று அந்த ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.
அதனடிப்படையில், இந்த விவகாரம் தொடர்பாக 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதில் காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட எப்ஐஆரின் நிலை, பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ சிகிச்சை மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இழப்பீடு ஏதேனும் இருந்தால் கொடுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு காரணமான, தவறு செய்த அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. 'அராக்' என்ற பெயரில் விற்கப்படும் சட்டவிரோத மதுபானம், மெத்தனால், ரசாயனங்கள் மற்றும் தண்ணீர் கலந்த காக்டெய்ல், தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் அதிகம் உட்கொள்வதாகவும் செய்திகளில் வெளியாவதாக அந்த ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கள்ளச்சாராய விற்பனை என்பது எல்லா ஆட்சிக்காலத்திலும் தான் இருக்கிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஓபன் டாக்