மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தன்யா தஸ்னீம் என்பவர் Go4Guru என்னும் இணையதள அறிவியல் சார்ந்த கேள்வி, பதில் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். அதன் மூலம் தற்போது நாசாவுக்கு செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
இது தொடர்பாக சென்னை தியாகராய நகரில் வெற்றி பெற்ற மாணவிக்கு நாசாவுக்கு செல்வதற்கான ஃபிளைட் டிக்கெட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் நாசா விஞ்ஞானி மருத்துவர் டான் தாமஸ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார். பின்னர் வெற்றி பெற்ற மாணவிக்கு நாசா விஞ்ஞானி டான் தாமஸ் வாழ்த்து தெரிவித்து நாசா செல்வதற்கான ஃபிளைட் டிக்கெட்டை வழங்கினார்.
இதனை தொடர்ந்து பேசிய மாணவி தன்யா தஸ்னீம், "எனக்கு அறிவியல் மிகவும் பிடிக்கும். என் பள்ளி ஆசிரியர்கள் என்னைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தினர். அதுவே இந்த வெற்றிக்கு காரணம். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அப்துல் கலாம் பேச்சுக்களை அதிகளவு நான் கேட்பேன். அதன் மூலமே அறிவியல் மீது ஆர்வம் ஏற்பட்டது" என்றார்.
பின்னர் நாசா விஞ்ஞானி டான் தாமஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சந்திராயன் 2-ஐ நிலவில் பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளேன். நான் 14 வயதில் இருக்கும் போது நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் தரை இறங்கியதை மிகவும் ஆர்வத்துடன் கண்டேன். அதேபோல் தற்போது சந்திராயன் 2 தென் பகுதியில் தரை இறங்கி, அங்கு என்னவெல்லாம் இருக்கும் என கண்டறிந்து அதில், நமக்கு எவற்றையெல்லாம் கற்றுக்கொடுக்கும்" என்பதை அறிந்துகொள்ள ஆர்வமாக உள்ளது என்றார்.