பல்லாவரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பரங்கிமலை மற்றும் பல்லாவரம் கன்டோன்மென்ட் பகுதியில் ஜீவா நகர் உள்ளது. இப்பகுதியில் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்டார் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்கு ஒதுக்கப்பட்ட கண்டோன்மென்ட் அரசுப் பள்ளியில் அதிகாலை முதல் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்தனர். சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் வசித்துவரும் நரிக்குறவர் இன மக்கள், பல இன்னல்களுக்கும் மத்தியில் தங்களது ஜனநாயகக் கடமை ஆற்றியது அப்பகுதியில் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
தங்கள் அன்றாட வயிற்றுப்பிழைப்பை இன்று ஒருநாள் ஓரங்கட்டிவிட்டு காலை முதல் கைக்குழந்தையுடன், தங்கள் வயதான பெற்றோர்களை கைத்தாங்கலாக வாக்குச்சாவடிக்கு அழைத்து வந்தனர். பின்னர் வரிசையில் நிற்கும்போதுகூட தாங்கள் கொண்டு வந்திருந்த ஊசிமணி பாசிமணி உள்ளிட்டவற்றை லாவகமாக கோர்த்தபடி வரிசையில் நின்றனர்.
இதே பகுதியில் பல ஆண்டுகளாக வசித்தபோதும் இந்த நரிக்குறவ இன மக்களை பார்க்காதவர்கள் முதல்முறையாக தங்களுடன் இணைந்து வரிசையில் நின்று வாக்களிப்பதை வியப்புடன் பார்த்தனர். இவர்களின் வாக்களிக்கும் ஆர்வத்தை கண்ட தேர்தல் அலுவலர்கள் அவர்களை மகிழ்ச்சியுடன் வாக்குச்சாவடிக்கு இன்முகத்துடன் வரவேற்றனர். தங்களுக்கு விருப்பமான சின்னத்திற்கு வாக்களித்து விட்டு, வெளியே வந்து விரலில் வைத்திருந்த மையை ஆர்வமுடன் காட்டியபடிச் சென்றனர்.
நரிக்குறவர் மக்கள் கூறுகையில், "தேர்தல் ஆணையம் எதிர்பார்த்த 100 விழுக்காடு வாக்களிப்பை யார் நிறைவேற்றினாலும் இல்லாவிட்டாலும் தாங்கள் கண்டிப்பாக நிறைவேற்றுவோம். தங்கள் பகுதியில் உள்ள அனைவரும்... கண்டிப்பாக ஒருவர் கூட தவறாமல் வாக்கு செலுத்துவோம். ஆனால், எங்களுக்கான அடிப்படை வசதிகளை இந்த அரசு செய்து கொடுக்க வேண்டும்" என்றனர்.