நாங்குநேரி தொகுதியை பொறுத்தவரையில் திமுக சார்பில் 1971ஆம் ஆண்டு கணபதியும், 1989ஆம் ஆண்டு ஆச்சியூர் மணியும் போட்டியிட்டு வென்றனர். இதுவரை இந்தத் தொகுதியில் திமுக இரண்டுமுறை மட்டுமே வென்றுள்ளது. பெரும்பாலான தேர்தல்களில் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளுக்குதான் இந்தத் தொகுதியை திமுக ஒதுக்கியுள்ளது.
ஆனால், அதிமுக எம்ஜிஆர் முதல் ஜெயலலிதா காலம் வரை நேரடியாக களம் கண்டு ஐந்துமுறை நாங்குநேரி தொகுதியை கைப்பற்றியுள்ளது. 2016ஆம் ஆண்டு அதிமுக ஆளும் கட்சியாக இருந்தபோதிலும் நாங்குநேரி தொகுதியில் தோல்வியைத் தழுவியது. நாங்குநேரி தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த ஹெச்.வசந்தகுமார், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதனால் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து காலியாக இருந்த நாங்குநேரி தொகுதிக்கு இடைத்தேர்தல் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கான விருப்ப மனுக்கள் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று வினியோகம் செய்யப்பட்டது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த உறுப்பினர் குமரி அனந்தன், கட்சி ஆசைப்பட்டால் நான் நாங்குநேரியில் போட்டியிட தயார் என்று முன்பே தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் குமரி ஆனந்தன் காங்கிரஸ் அலுவலகத்துக்கு இன்று நேரில் வந்து விருப்ப மனுவை பெற்றுக் கொண்டார். அதேபோன்று எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த ஹெச்.வசந்தகுமார், நாங்குநேரி தொகுதியை தனது மகன் நடிகர் விஜய் வசந்தை வைத்து மீண்டும் தன் வசமாக்க முயன்று வருகிறார். இதற்காக விஜய் வசந்த் பெயரில் இன்று விருப்ப மனு பெறப்பட்டுள்ளது.
குமரி ஆனந்தன் இலக்கியத்தில் பேரார்வம் கொண்டவர். காமராஜருக்கு மிகவும் நெருங்கியவர். இவர் மொத்தம் 5 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர். 1980ஆம் ஆண்டு காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் என்ற கட்சியை ஆரம்பித்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். குமரி அனந்தனுக்கு தற்போது 86 வயதாகிறது.
காமராஜர் காலத்திலிருந்து காங்கிரஸில் பணியாற்றி வரும் குமரி அனந்தன் தற்போது ஒரு அடிப்படை தொண்டன் மட்டுமே. அவருக்கான உரிய அங்கீகாரத்தை காங்கிரஸ் கட்சி வழங்கவில்லை என்ற விமர்சனம் கட்சி மீது மொழிவதுண்டு. ஹெச்.வசந்தகுமார் அரசியல்வாதி மட்டுமல்ல அவர் ஒரு தொழிலதிபரும் கூட. இவர் நாங்குநேரி தொகுதியில் 2006 மற்றும் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடியவர். இவருடைய மகன் விஜய் வசந்த் ஒரு நடிகர். இவர் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் என்றாலும் கட்சி செயல்பாடுகளில் குறைவாகவே காணப்படுகிறார். அப்படி இருக்கையில் விஜய் வசந்திற்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிப்பது காங்கிரஸ் கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் வசந்த் நடித்த படங்கள் விரல் விட்டு எண்ணும் வகையிலேயே உள்ளது. நடிப்பிலும் அறைகுறை, அரசியலிலும் அறைகுறை இவரை எப்படி நாங்குநேரி தொகுதி வேட்பாளராக அறிவிக்க முடியும் என்று காங்கிரஸார் கொந்தளிக்கின்றனர். சினிமாவைப் போன்று அரசியலிலும் அரசியல் வாரிசுகள் தலைதூக்க ஆரம்பித்துவிட்ட நிலையில், விஜய் வசந்த் அரசியலுக்கு வருவதும் ஒன்றும் புதிது அல்ல. ஆனால் விஜய் வசந்த் மக்களால் அறியப்பட்டவரா? கட்சிக்காக இதுவரை என்ன செய்துள்ளார்.
கட்சி தொண்டனாக அவர் செய்த செயல்கள் என்ன? விரல் விட்டு எண்ணும் வகையில் ஒன்றாவது கூற முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளன. குமரி அனந்தனை நாங்குநேரி தொகுதி மக்களுக்கும் மட்டும் அல்ல தமிழ்நாட்டு மக்களும் நன்கு அறிவர். அவரது ஆளுமைத்திறன் நன்கு அறிந்துள்ளனர். பழம்பெரும் அரசியல்வாதியை நாங்குநேரியில் நிற்க வைப்பதற்கு பதிலாக காங்கிரசுக்குள் குடும்ப சண்டைகள் தான் மூண்டுள்ளன என்று அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
நாங்குநேரிக்கான போராட்டம் ஏன்?
குமரி ஆனந்தனின் சகோதரர் தான் ஹெச்.வசந்தகுமார். இவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தவர்கள் என்பதால் இவர்கள் இருவருக்குமே நாங்குநேரி தொகுதியில் நல்ல செல்வாக்கு உள்ளது. இருவருக்குள் ஒருவர் விட்டுக்கொடுத்து. சமரசமாக பேச்சுவார்த்தை நடத்தினால் எல்லாம் சரியாகிவிடும். அரசியலுக்குள் குடும்ப சண்டையை கொண்டுவர வேண்டாம் என்றும் மேல்மட்டம் மறைமுகமாக தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நாங்குநேரி தொகுதியில் வேட்பாளர் பெயரை அறிவிப்பதற்குள் காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் பூகம்பமே வெடிக்க வாய்ப்புள்ளது என்றும் அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.