முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன் இருவரின் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினியின் தாயார் பத்மா ஆட்கொணர்வு மனு ஒன்றை முன்னதாகத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், இருவரும் இலங்கையில் உள்ள முருகனின் தாயார் சோமனியம்மாளிடம் தினமும் 10 நிமிடம் வாட்ஸ்-அப் காணொலி அழைப்பு வாயிலாக பேச அனுமதி அளிக்க வேண்டும் எனவும், லண்டனில் உள்ள முருகனின் தங்கையுடன் நளினையைப் பேச அனுமதிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்தியாவில் உள்ள உறவினர்கள், நண்பர்களுடன் பேச அனுமதிக்க தயார் என்றும், ஆனால் வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் பேச அனுமதி இல்லாததால், வெளிநாட்டில் உள்ளவர்களுடன் லேண்ட் லைனில் பேச அனுமதிப்பது தொடர்பாக, மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு சார்பாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ”நளினி, முருகன் ஆகிய இருவரும் தமிழர்கள்தானே? ஏழு பேரை விடுதலை செய்ய சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழ்நாடு அரசு, உறவினர்களிடம் பேச அனுமதி மறுப்பது ஏன்? ஏன் இந்த முரண்பாடு? அரசு மனிதாபிமானத்துடன் செயல்பட வேண்டும்” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், இதுகுறித்து தமிழ்நாடு அரசு தனது பதிலை நாளை(ஜூன்.3) தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க : ‘குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முகக்கவசங்கள்!’ - முதலமைச்சர் பரிசீலனை