சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட தீர்மானத்தை, ஆளுநர் திருப்பி அனுப்பியதை மீண்டும் தனித் தீர்மானம் கொண்டுவந்து ஆளுநருக்கு அனுப்பி வைக்க சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் கூட்டப்பட்டது. அதில் கலந்து கொண்ட பாஜகவினர், அதை எதிர்த்து வெளிநடப்பு செய்தனர்.
பின்னர், பாஜகவின் சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "தமிழக முதல்வரால் கொண்டுவரப்பட்ட தனி தீர்மானங்களை கண்டித்தும், பேரவையில் நிறைவேற்றப்பட்டு அமைச்சர்களால் திருப்பி அனுப்பி வைக்க இருக்கும் தீர்மானங்களைக் கண்டித்தும் வெளிநடப்பு செய்வதாகத் தெரிவித்தார்.
மேலும், வேந்தர், துணை வேந்தர்கள் விவகாரத்தில் முதல்வரே நியமனம் செய்வார் என கொண்டுவரும் தீர்மானம் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரான செயலாகும். கல்வி மாநில அல்லது மத்திய அரசிடமோ இல்லை. அது பொதுப்பட்டியலில் உள்ளது. உயர்கல்வியை பொறுத்தவரையில், நீட் தேர்வாக இருந்தாலும், வேறு ஏதேனும் கல்விக் கொள்கை முடிவாக இருந்தாலும் அதை மத்திய அரசு தான் நிறைவேற்ற முடியுமே தவிர மாநில அரசு நிறைவேற்ற முடியாது.
கல்விக் கொள்கை பிரிவு 7லில் இருந்து 11க்கு மாற்ற அவசரக் காலத்தில் அந்த அதிகாரம் மாநில அரசிற்கு இல்லை, மத்திய அரசிற்குத் தான் உள்ளது. அதன் அடிப்படையில் தான் இது அரசியல் அமைப்பிற்கு எதிரானது என்று கூறுகிறோம். ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஆளுநரை திமுகவினர் தரக்குறைவாகப் பேசுகிறார்கள். சட்டப்பேரவையில், ஆளுநர், மத்திய அரசு பற்றி அவதூறாகப் பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். இது ஒரு மிதமான போக்கே இல்லை என்பது வருத்தமளிக்கிறது.
தற்போது மக்கள் மத்தியில் திமுக அரசு தனது செல்வாக்கை இழந்து வருவதால் எதையாவது செய்ய வேண்டும் என்கிற சூழலில் தீர்மானத்தை ஆளுநர் திருப்பிய விவகாரத்தில் மட்டுமல்லாமல் ஆளுநரின் செயல்பாடுகளைக் கையிலெடுத்துக் கொண்டு பேசி வருவது தேவையற்றது.
மேலும், மீண்டும் தீர்மானத்தைத் திருப்பி ஆளுநருக்கு அனுப்பி வைக்க சிறப்பு சட்டப்பேரவை கூட்ட வேண்டிய அவசியமில்லை. முக்கியமாக பல்வேறு மக்கள் பிரச்சினைகளான, மின்கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு என பல்வேறு மக்கள் பிரச்சினைகள் வரும் பாராளுமன்ற தேர்தலில் நிச்சயமாக திமுகவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியதை நிறைவேற்றத் தவறிவிட்டது. குறிப்பாக நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்று தெரிந்தும் அதைக் கொண்டு வருவோமென கூரிவருகிறார்கள். கல்வியைப் பொருத்த வரையில் மாணவர்களின் தரத்தை உயர்த்த வேண்டுமே தவிர, மாநிலத்தின் தரத்தை உயர்த்த தேவையில்லை. வெளிநாடுகளில் நம்முடைய மாணவர்கள் திறமையாக செயல்படுகிறார்கள் அவர்களின் தரத்தை மேலும் உயர்த்த வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பல்கலைக்கழக வேந்தர், துணை வேந்தர் நியமன விவகாரம் - சட்டசபை சிறப்பு கூட்டத்தில் காரசார விவாதம்!