பிரதமர் மோடி காணொலி மூலம் ராமநாதபுரம் - தூத்துக்குடி மாவட்டங்களில் இயற்கை எரிவாயு குழாய் திட்டம், சென்னை மணலியில் எரிவாயு உற்பத்தி திட்டம் ஆகியவற்றை திறந்து வைத்தார். பின்பு நாகப்பட்டினத்தில் ரூ.31 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார்.
இதில் பங்கேற்ற முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது, "இந்த மூன்று திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேலும் பன்மடங்காகப் பெருகும். கரோனா காலகட்டத்திலும் தமிழ்நாடு 101 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டிற்கு 88 ஆயிரத்து 727 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் வரும்.
இவற்றில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். சிறப்பான வகையில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பது, தொடர் மின்சார விநியோகம், தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க சலுகைகள், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது ஆகியவற்றால் தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நாகப்பட்டினத்தில் அமையவுள்ள பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை மூலம் தொழில் ரீதியாக பின்தங்கி உள்ள அம்மாவட்டம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெறும்" என்று முதலமைச்சர் தெரிவித்தார்.
மேலும், இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலாவை அறிவிக்கக்கோரிய வழக்கு: மார்ச் 15ஆம் தேதி விசாரணை