சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஏப்.11) சிறப்பு திட்ட செயலாக்கத்துறையில் 7 புதிய அறிவிப்புகளை அத்துறையின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். அதன் விபரங்கள் பின்வருமாறு...
- நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சியை செயல்படுத்த, அனைத்து அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் 'நான் முதல்வன் திறன் மற்றும் வேலைவாய்ப்பு மையம்' நிறுவப்படும். இதற்காக ஒரு பொறியியல் கல்லூரிக்கு 70 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 21.70 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
- நான் முதல்வன் திட்டம், தொழில் பயிற்சி நிலையங்கள், பாலிடெக்னிக் மற்றும் பிற தொழில்முறை படிப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும். இதற்கென்று 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
- தமிழ்நாட்டில் மரபுசார் கலை மற்றும் கைவினை திறன்களை மேம்படுத்துவதற்கும், இளைஞர்களின் மரபு சார் கலை மற்றும் கைவினை திறன்களை ஊக்குவிப்பதற்காகவும், கைவினை திறன் பள்ளிகள் அறிமுகப்படுத்தப்படும். இதற்கென 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
- விளையாட்டு அடிப்படையிலான கற்றல் தளம் வழியாக அறிவாற்றல் திறன்களை கண்டறிந்து தனித்திறன் பெற்ற மாணவர்களை உருவாக்க பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நான் முதல்வன் ஒலிம்பியாட் நடத்தப்படும். இதற்கென்று முதற்கட்டமாக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
- மேம்படுத்தப்பட்ட அனைத்து அரசினர் தொழில் பயிற்சி நிலையங்களும் திறன் பயிற்சி மையங்களாக அங்கீகரிக்கப்படும்.
- மாநிலத்தில் உள்ள அனைத்து திறன் மேம்பாட்டு திட்டங்களுக்கும் சான்றளிக்கும் அமைப்பாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் செயல்படும்.
- அடுத்த கல்வியாண்டில் கல்லூரிகளில் நான் முதல்வன் திட்ட படிப்புகளை நடத்த முதன்மை பயிற்சியாளர்களின் தொகுப்பு உருவாக்கப்படும்.