சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அவதூறு பரப்பும் நடிகை விஜயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அம்பத்தூரில் உள்ள ஆவடி காவல் இணை ஆணையர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் புகார் மனு அளித்துள்ளனர்.
நடிகை விஜயலட்சுமி மற்றும் சீமான் இடையேயான பிரச்சனை கடந்த சில நாட்களாக மீண்டும் தொடங்கி உள்ளது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில், தமிழகம் முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடிகை விஜயலட்சுமி மற்றும் வீரலெட்சுமி சேர்ந்து சீமான் மீதும், நாம் தமிழர் கட்சியின் மீதும் அவதூறு பரப்புவதாகவும், மத நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் பேசி வருவதாகவும், புகார் மனு அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2011ஆம் ஆண்டு வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில், நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் ஒன்று அளித்தார். புகாரில், சீமான் என்னை காதலித்த நிலையில் இருவரும் 2008 ஆம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாலை மாற்றிக் கொண்டோம்.
மேலும், விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் முன்னிலையில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியதாகவும், இதையடுத்து வேளச்சேரியில் உள்ள வீட்டில் இருவரும் கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்த நிலையில், பலமுறை தான் கர்ப்பம் அடைந்த நிலையில் அவரது வற்புறுத்தலால் கருவை கலைத்ததாகவும், தன்னிடமிருந்து நகை, பணம் ஆகியவற்றை வாங்கிக் கொண்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து தன்னை ஏமாற்றி விட்டதாகவும் புகார் மனுவில் தெரிவித்து இருந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை விஜயலட்சுமி, பெருநகர சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தான் அளித்த புகாரின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தற்போது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்து, அதற்கான ஆதாரங்களையும் கொடுத்து பேட்டி அளித்து இருந்தார்.
மேலும், புகார் மனுவின் அடிப்படையில், ராமாபுரம் காவல் நிலையத்தில் 6 மணி நேரமும், மதுரவாயல் காவல் நிலையத்தில் 4 மணி நேரமும் விசாரணை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, நேற்று (செப். 2) காலை திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்தார்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தொடர்ந்து அவதூறு பரப்புவதாக நடிகை விஜயலட்சுமி மற்றும் வீரலட்சுமி மீது, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் ஆவடி காவல் இணை ஆணையரிடம் புகார் மனுவை அளித்தனர். தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் விஜயலட்சுமி, வீரலட்சுமி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: Seeman : "சட்டப்படினாலும் சரி.. அரசியல் ரீதியினாலும் சரி சந்திக்கலாம்.. நான் ரெடி" - சீமான்!